(இ -ள்.) (அப்பொழுது), பரத்துவாசனும் - பரத்துவாசகுமாரனான துரோணாசாரியனும், (துரியோதனனை நோக்கி), 'நீ-, திரத்து வாய்மை தவறி - உறுதியான சத்தியத்தைத் தப்பி, சேனையும் திறலுங்கொண்டு - (உனது) சேனைகளையும் மற்றை வலிமைகளையுமே முக்கியமாகக் கொண்டு அவற்றால், அவருடன் - அப்பாண்டவர்களோடு, உரத்து வாள் அமர் - வலிமையுள்ளதான ஆயுதங்களாற் செய்யும்போரை, உடற்றலோ - செய்யத் தொடங்குதலோ, பெரு பிழை - பெரிய குற்றமாகும்; உடன்றனை ஆம் ஆகின் - (அங்ஙனம்) போரைச்செய்வாயாகில், தனஞ்சயன் தனு - அருச்சுனனது (காண்டீவமென்னும்) வில், சரத்து வாய் தொறும் - அம்புகள் தைத்த இடங்களிலெல்லாம், சோரி கக்கிட - இரத்தம் பெருகும்படி, விடும் - (அம்புகளை) வீசும்,' என்று, பகர்ந்தனன் - சொன்னான்; கிருபனும் - கிருபாசாரியனும், பகர்ந்ததே பகர்ந்திட்டான் - (கீழ்த்துரோணன்) கூறியதையே தானும் கூறினான்; (எ - று.) துரோணனும்கிருபனும், சொன்னசொல் தவறாமல் இராச்சியத்தைத் தருமனாதியர்க்குக் கொடுத்தலே செய்யத்தக்கது; வாய்மை தவறிப்பொருதாலோ அருச்சுனன் கணைக்குத் தப்புவது முடியாது என்று தம் கருத்தைத் தெரிவித்தன ரென்க. கௌதம முனிவனது பௌத்திரனும், சரத்துவந்த முனிவனது குமாரனும் ஆகிய கிருபாசாரியன் முதலிலும், அக்கிருபனது உடன் பிறந்தவளான கிருபியினது கணவனான துரோணன் அதன் பின்னும் கௌரவ பாண்டவர்க்கு வில்வித்தை பயிற்றிவைத்தனரென அறிக. இம்மை மறுமைகளில் சத்தியமே நன்மையை விளைத்தலால், திரத்து வாய்மை எனப்பட்டது. வாய்மை - மெய்யினதுதன்மை. மற்று - அசை; வினைமாற்றென்றுங் கொள்ளலாம். மற்றவரென எடுத்து, எதிரிகளான அவர்களுடனே எனினுமாம். வாள் என்னுஞ் சிறப்புப்பெயர் இங்குப்பொதுவாக படைக்கலமென்ற மாத்திரமாய் நின்றது; இங்ஙனம் சிறப்புப்பெயர் பொதுப்பொருளையும், பொதுப்பெயர் சிறப்புப் பொருளையும் உணர்த்துவது - ஒருவகைப் பாஷை வழக்கம். இனி, வாளென்னும் ஆயுதவிசேடத்தின் பெயர் மற்றைப்படைகள் பலவற்றிற்கும் உபலக்ஷணமென்றுங் கொள்ளலாம். வாய் - படுமிடமாதலை "வாள்வாயுமின்றிவடுவெங்கணை வாயுமின்றி" எனச்சிந்தாமணியிலுங் காண்க. தொறு என்பது - தன்னை யேற்ற பெயர்ப்பொருளெங்கும் அப்பெயர்ப்பொருளோடு இயையும் பொருளிருக்கையைக் குறிக்குமிடைச்சொல். சொரிவது, சோரி; காரணப்பெயர். தனஞ்சயன்என்பதற்கு - செல்வத்தைச் சயித்தவனென்று பொருள். தருமபுத்திரன் இராஜசூயயாகஞ் செய்ய வேண்டியபொழுது, அவர் கட்டளையால் அருச்சுனன் வடதிசையிற்சென்று பல அரசர்களை வென்று அவர்கள் செல்வத்தைத் திறையாகக் கொணர்ந்ததனால், இவனுக்கு இப்பெயர் வந்தது. இனி இதற்கு - வெற்றியையே செல்வமாகக் கொள்பவனென்றும் பொருள் கொள்ளலாம். பரத்துவாசன் என்பது, அவன் மைந்தனென்னும் பொருளில் |