தனயர்-(அவனது) புத்திரர் பலரும், அங்கு அவையின்கண் இருந்த நர அதிபர்- (இன்னும்) அப்பொழுது அச்சபையிலிருந்த அரசர்களும், அடைய - எல்லோரும், எழுந்து - எழுந்திருந்து, அடைவே - முறைப்படி, செம் கை குவித்த சிரத்தினர் ஆய் - சிவந்த கைகளைத் தலைமேற் கூப்பியவர்களாய், உணர்வு ஒன்றிய சிந்தையர் ஆய் - அறிவுள்ள மனமுடையவர்களாய், எங்கள்பிழைப்பினை இன்று பொறுத்தருள் என்று - 'எங்கள் குற்றங்களை இப்பொழுது(நீ) பொறுத்தருள்வாயாக' என்று சொல்லி, பணிந்தனர் - வணங்கினார்கள்; (எ- று.)
இது -பரவசமாக நிகழ்ந்தது. குற்றம் துரியோதனனது ஆயினும், அதனைத் தாங்கள் தடுக்காமலே உடன்பட்டாற் போலிருந்ததனால், 'எங்கள் பிழைப்பு' என்றது. பிழைப்பு - பிழைசெய்தல்; தொழிற்பெயர். செங்கை குவித்த சிரத்தினர் - செங்கை சிரசிற் குவித்தனரென விகுதிபிரித்துக் கூட்டப்பட்டது. நராதிபர் - மனிதர்க்குத் தலைவர்; நர + அதிபர் எனப்பிரியும். தலைமேற் கைகளைக் குவித்து வணங்குதல், திரியங்க நமஸ்காரமெனப்படும். (271) 212. | கண்ணபொறுத்தருள் வெண்ணெயருந்திய கள்வபொறுத் தருள்கார், வண்ணபொறுத்தருள் வாமபொறுத்தருள் வரதபொறுத் தருணீ, திண்ணமனத்துணர்வொன்றுமிலாதவர் செய்தபெரும்பிழையென், றண்ணன்மலர்க்கழல் சென்னியில்வைத்தெகி ரன்றுதுதித்தனரே. |
(இ -ள்.) 'கண்ண - ஸ்ரீகிருஷ்ணனே! மனத்து திண்ணம் உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை - மனத்தில் உறுதியான அறிவு சிறிதுமில்லாத நாங்கள் செய்த பெரிய குற்றங்களை, நீ பொறுத்தருள்-; வெண்ணெய் அருந்திய கள்வ - வெண்ணெயைக் களவுகொண்டு அமுது செய்தவனே! பொறுத்தருள்-; கார்வண்ண மேகம் போன்ற கருநிறமுடையவனே! பொறுத்தருள்-; வாம - பேரழகுடையவனே! பொறுத்தருள்-; வரத - (அடியார்களுக்கு வேண்டிய) வரங்களைத் தருபவனே! பொறுத்தருள்-,' என்று - என்றுசொல்லி, அண்ணல் மலர் கழல் சென்னியில் வைத்து - பெருமையிற் சிறந்த கண்ணபிரானது தாமரைமலர் போலுந் திருவடிகளைத் தம்தலையின்மேல் வைத்து வணங்கி, அன்று - அப்பொழுது, எதிர் - எதிரில், துதித்தனர் - துதிசெய்தார்கள்; (எ -று.) - இதற்கு முற்பாட்டிலுள்ள 'கங்கை மகன்' முதலியோர்களே எழுவாய்.
க்ருஷ்ணனென்னும் வடமொழி, பிராகிருத பாஷை மூலமாய்க் கண்ணன் எனத் திரிந்துவந்தது; 'கண்ணனென்பது - கரியானென்னும் பொருளதோர் பாகதச்சிதைவு' என்று திருக்கோவையாருரையில் பேராசிரியர் கூறியவாறு காண்க. இலாதவர் தம்மைப் பிறர்போற் கூறியது; தன்மையிற் படர்க்கை வந்த இடவழுவமைதி. (272) |