வேறு. 238.-இந்திரன்கிழவடிவங்கொண்டு கர்ணன் மாளிகைவாயிலை யடைதல். தண்டுதாளெனக்குனிந்துடலலமரத்தாளிணைதளர்ந்துதள்ளாடக், கண்டியாவருங்கைதொழக் கவித்தகைக்குடையுடன் கங்கைநீர் நுரையை, மொண்டு மேலுறச்சொரிந்ததா மெனநரைதிரையுடன் மூப்பொரு வடிவங், கொண்டதாமெனவொரு முனியாகியே கொற்றவன் வாயில் சென்றடைந்தான். |
(இ -ள்.) தண்டு தாள் என - (நடக்கும் ஆற்றல்குறைதலால் முன்னே கையி லூன்றிப்பிடித்த) தடி கால்போல் (உடம்புக்கு ஓர் ஆதாரமாய்) நிற்கவும், உடல் குனிந்து அலமர - உடம்பு கூன்வளைந்து தளரவும், தாள் இணை தளர்ந்து தள்ளாட - இரண்டு கால்களும் சோர்வையடைந்து (நன்கு நடக்கமாட்டாமல்) நடுங்கவும், யாவரும் கண்டு கைதொழ - எல்லோரும் (தனது விருத்த வேதிய வடிவத்தைப்) பார்த்து நன்குமதித்துக் கைகூப்பி வணங்கவும், கவித்த கை குடையுடன் - மேலே கவியுமாறு பிடித்த சிறிய குடையுடனே, கங்கை நீர் நுரையை மொண்டு மேல் உற சொரிந்தது ஆம் எனநரை - கங்கா நதியினது நீரின் நுரையை மொண்டெடுத்து மேலே மிகுதியாகச்சொரிந்ததுபோல வுள்ள வெள்ளை மயிர்களும், திரையுடன் - தோல்சுருங்குதலும் ஆகிய இவற்றுடனே, மூப்பு ஒரு வடிவம் கொண்டது ஆம் என- முதுமைப் பருவமே ஒரு புருஷ ரூபத்தைக் கொண்டாற்போன்றதாமென்றுசொல்லும்படி, ஒரு முனி ஆகி - அந்தணனது வடிவங்கொண்டவனாய்,(இந்திரன்), கொற்றவன் வாயில் சென்று அடைந்தான் - வெற்றியையுடையகர்ணனது வீட்டின் வாயிலைப் போய்ச்சேர்ந்தான்; (எ - று.)
"தண்டுகாலா வூன்றியூன்றித் தள்ளி நடவாமுன்" என்றார் திருமங்கையாழ்வாரும். கங்காநதி இயல்பில் வெண்ணிறமான நீரை யுடையதாதலால், நரையின் மிக்க வெண்மைக்கு அதன் நுரையை உவமையெடுத்துக் கூறினார். அலமர என்னுஞ் செயவெனெச்சத்தில் அலமா -பகுதி. நரைப்பது, நரை; திரைப்பது, திரை; வினைமுதற் பொருள் விகுதிபுணர்ந்துகெட்ட பெயர்கள். நரைத்தல் - மயிர் வெளுத்தல்; திரைத்தல் -தோல் சுருங்குதல்; இவையெல்லாம், முதுமைப்பருவத்தின் இயற்கை. மூப்பு -மூத்தல், பிராயம் முதிர்தல்; மூ என்னும் வினைப்பகுதியடியாப் பிறந்ததொழிற்பெயர். இப்பாட்டில், தன்மைநவிற்சியணி,மூன்று உவமைகளைஅங்கமாகக்கொண்டு வந்தது. "நூலே கரகம்" என்ற சூத்திரத்து'ஆயுங்காலை' என்றதனால் குடை முதலிய சிலவும் அந்தணர்க்குஉரியனவென்று கொள்ளப்பட்ட வாறும், "எறித்தருகதிர்தாங்கி யேந்தியகுடைநீழல்" எனக் கலித்தொகையிற் கூறப்பட்டவாறுங் காண்க. "தண்டொடுபிடித்ததாழ்கமண்டலத்துப், படிவவுண்டிப் பார்ப்பன மகனே" என்றபடிஅந்தணர்க்குத் தண்டும் உரியதாம். |