என்று -என்று சொல்லி, (எ - று.) - 'விடை கொடுத்ததன்பின்', எனமேற்கவியோடு தொடரும். உத்தமரது தானச்சிறப்பை யெடுத்துக்கூறுவார், அதற்கு எதிராகிய அதமரதுலோபகுணத்தின் இழிவையும் உடனெடுத்துக் காட்டினார். இங்கே 'கர்ணன்மிகுந்த கொடையாளி' என்ற சிறப்புப் பொருளை 'உத்தமரது உதாரகுணம்இத்தன்மையது' என்ற பொதுப்பொருள்கொண்டு விளக்கியது வேற்றுப்பொருள் வைப்பணி.இரந்தவற்கு - இரந்த உனக்கு என முன்னிலைப்படர்க்கை. உயிரினும் அரியது இன்றாதலின், 'ஆருயிர்' எனப்பட்டது. ஆருயிர் - பண்புத்தொகை; இனிவினைத்தொகையாகக் கொண்டு, நிறைந்த [பஞ்ச] பிராணன்களென்றுமாம்.எண்மையாயினும் கிளைஞரே யேற்பினும், ஆருயிர்மாற்றலார் கேட்பினும்என்றவற்றால், உலோபிகளுக்கும் உதாரகுணமுடையார்க்கும் உள்ள வேறுபாடு நன்குவிளக்கப்பட்டது. வண்மையாளர் - வண்மைக்குணத்தை யாள்பவர். மாற்றலார் - தம்மிடத்து மனத்தை மாற்றுதலுடையவரென உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும்பெயராகிய காரணக்குறி. பின் இரண்டடி - உலக இயற்கை கூறியது. எண்மை என்னும் பண்புப் பெயரில் எள் - பகுதி; அது இகரம் பெற்று எளிமையென்றும் நிற்கும். செல்வம் படைத்ததற்குப் பயன் பிறர்க்குக் கொடுத்தலே யாதலால், அத்தன்மையில்லாதாரை, 'இயல்பிலாப் புன்செல்வர்' என்றார். (306) 247.- கண்ணன் குந்தியைக்கர்ணனிடம் அனுப்புதல். வாசவன்றனக்குவிடைகொடுத்ததன்பின்வந்தகாரியந்தனை முடிப்பான், கேசவன்றனதுதாதையோடுதித்த கேண்மைகூர்தெரிவையைக் கிட்டித், தேசவன்றந்தகுரிசில்பால்விரைவிற்செல்கெனப் பயந்த சேயிழையும், பாசமுன்னுறமாலேவலாற்றனதுபாதபங்கயஞ்சிவப்பித்தாள். |
(இ -ள்.) வாசவன் தனக்கு - இந்திரனுக்கு, விடைகொடுத்ததன் பின்- செலவு கொடுத்தனுப்பியபின், கேசவன் - கண்ணன், வந்த காரியந்தனை முடிப்பான் - (தான் திருவுள்ளத்திற்கருதி) வந்த தொழிலை நிறைவேற்றும்பொருட்டு, தனது தாதையோடு உதித்த கேண்மை கூர் தெரிவையை கிட்டி - தனது தந்தையாகிய வசுதேவருடன் பிறந்த [தனது அத்தையாகிய] (யாவரிடத்தும்) அன்பு மிக்க குந்திதேவியை அடைந்து, தேசவன் தந்தகுரிசில்பால் விரைவின் செல்க என - ஒளிமிகுதியையுடைய சூரியன் பெற்ற குமாரனான கர்ணனிடத்திற் சீக்கிரமாகச் செல்வாயென்று சொல்ல,- பயந்த சேயிழையும் - (அவனைப்) பெற்றவளான குந்திதேவியும், பாசம் முன்உற - (மைந்தனாகிய கன்னன்பக்கல்) அன்பு (தனக்கு) முன் செல்ல,மால் ஏவலால் - கண்ணனது கட்டளைப்படி, தனது பாதபங்கயம் சிவப்பித்தாள்- தன்னுடைய தாமரைமலர்போன்ற கால்களைச் சிவக்கச்செய்தாள்; (எ - று.) |