முன்னேஇராமாவதாரத்தில் சூரியகுமாரனான சுக்கிரீவன் பக்கத்திற் சேர்ந்து இந்திர புத்திரனான வாலியை வதைத்ததற்குப் பிரதியாக இவ் வவதாரத்தில் இந்திரகுமாரனான அருச்சுனன்பக்கல் சேர்ந்து சூரியபுத்திரனான கர்ணனை அழித்தருளுகின்றான்போலும், தெரிவை - இங்கே பெண்ணென்னும் மாத்திரமாய்நின்றது; அப்பருவத்துக்கு வயதெல்லை - இருபத்தாறு முதல் முப்பத்தொன்றளவும். தேசு - கிரணம்; அதனையுடையவன், தேசவன். சேயிழை யென்பதற்குச் சிவந்த [செம்பொன்னாலாகிய] ஆபரணங்களையுடையவளென்று பொருள்; பண்புத்தொகை யன்மொழி; செம்மை இழையெனப் பிரிக்க. இழை - இரத்தினங்களை யிழைத்துச் செய்வதென ஆபரணமாம்; இனி, இழையென்னும் நூலின்பெயர் சினையாகு பெயராய், ஆடையையுணர்த்துவ தென்றுங் கொள்ளலாம். (307) 248.-தனது மாளிகைக்கு வந்தகுந்திதேவியைக் கர்ணன் எதிர்கொண்டு சென்று உபசரித்தல். வந்துகுந்திநின்கோயிலெய்தினளெனவாயிலோருரைத்திட மைந்தன், முந்துமன்புடன்றொழுதெதிர் கொண்டுநன்முறைமையாலாசனத் திருத்தி, யிந்துவின்கதிர்கண்டுமேன்மேலுமுற்றிரங்கிவான்கரைகடந் தேறுஞ், சிந்துவெண்டிரைச்சிந்துவொத்துருகுந் தெரிவையோடுரை சிலசெப்பும். |
(இ -ள்.) (இங்ஙனம் குந்தி கர்ணன்வீட்டுக்கு நடந்து சென்றதும்), குந்திவந்து நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட - குந்திதேவிவந்து உனது சிறந்த அரண்மனையை அடைந்தாளென்று வாயில் காவலாளர்சொல்ல, மைந்தன் - புத்திரனாகிய கர்ணன், முந்தும் அன்புடன் மிகுந்தஅன்புடனே, எதிர்கொண்டு - எதிர்கொண்டுவந்து, தொழுது - வணங்கி,நல்முறைமையால் - (சாஸ்திரங்களில் தாய்க்குச் செய்யும்படி சொன்ன) நல்லஉபசார முறைதவறாமல், ஆசனத்து இருத்தி - (சிறந்ததோர்) ஆசனத்திலேவீற்றிருக்கச்செய்து, இந்துவின் கதிர் கண்டு மேல் மேலும் உற்று இரங்கி வான்கரை கடந்து ஏறும் சிந்து வெள் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு -சந்திரனது கிரணத்தைப் பார்த்து (மிகமகிழ்ந்து) மேலே மேலே பொங்கிஒலித்துப் பெரிய கரையைக் கடந்து மீதெழுகிற வீசுகிற வெண்மையானஅலைகளையுடைய கடலைப்போன்று மனம் மிக மகிழ்கிற அக்குந்தியுடனே,சில உரை செப்பும் - சிலவார்த்தைகளைக் கூறுவான்;(எ-று.)
சந்திரனைக் கண்டமாத்திரத்தில் கடல் பொங்குவது பிரசித்தம். சூரியபுத்திரனான கர்ணனுக்குச் சந்திரனையும், அவனது தாய்க்குச் சந்திரனுக்குஉற்பத்தி ஸ்தானமான கடலையும் உவமை கூறினார். இந்து - வடசொல். நான்காமடியிலுள்ள சிந்துவென்னுஞ்சொல் இரண்டனுள், முன்னது - தமிழ்வினைப் பகுதி; பின்னது - ஸிந்துவென்னும் வடமொழிப்பெயர். (308) |