கழியேனாகில் திண்டோள்கள் வளர்த்ததனாற் செயல்வேறுண்டோ" "செருவிலென துயிரனைய தோழற்காகச் செஞ்சோற்றுக் கடன்கழித்தேன்' எனக் கன்னபருவத்துக் கூறுமாறுங்காண்க முன்புஒருநாள் கர்ணன் துரியோதனன்மனைவியான பாநுமதியோடு தனிமையான இடத்திற்சூதாட்டமாடிக் கொண்டிருக்கையில் துரியோதனன் தூரத்தில் வருதலைக்கண்டு பாநுமதி எழுந்துசெல்ல, அவன் வருதலைப் பாராத கர்ணன் ஆட்டத்தின்நடுவில் எழுந்துசெல்லலாகாதென்று அவள்மடியைப்பற்றி இழுத்தபொழுது, மேகலையறுந்து மணிகள் உதிரவே, அச்சமயத்தில் துரியோதனன்வந்ததைநோக்கிக் கன்னன் அஞ்சிவெள்கி என் செய்வதென்று அலமருகையில், அத்துரியோதனன், கன்னன் அஞ்சாதபடி 'இம்மணிகளை நான்எடுத்துக் கோத்துக் கொடுக்கட்டுமா?' என்று கேட்டனனென்பது வரலாறு.பாரதவெண்பாவிலும் இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது. செஞ்சோறு - சிறந்தஅன்னம்; அறுசுவையோடு கூடிய உணவு; மானக்குறைவு இல்லாதபடி இட்டுவந்தது. மேகலை - எட்டுக்கோவையுடையது; "எண்கோவைமேகலை" என்பதுகாண்க. (315) 256.-குந்தி வருந்துதல். பின்னையும்பற்பன்மொழிந்தபின்பலவும்பேசியென்பூசலோவிளைந்தது, உன்னிநீரிங்குவந்ததென்கரவாதுண்மையா லுள்ளவாறுரைமின், என்னமைந்தனுமிப்பரிசினாலுரைப்ப வீன்றறத்துறந்தவன்றையினும், அன்னைநெஞ்சழிந்தேயிருகணீர்சொரியவலறிவாய்குழறிநொந்தழுதாள். |
(இ -ள்.) மைந்தனும் - புத்திரனான கர்ணனும், பின்னையும் பலபல மொழிந்த பின் - பின்னும் அநேகவார்த்தைகளைச் சொன்ன பின்பு, 'பலவும் பேசி என் - பலவார்த்தைகளையுஞ் சொல்லிப் பயன் என்ன? பூசலோ விளைந்தது - யுத்தமோ உண்டாகிவிட்டது; நீர் இங்கு உன்னி வந்தது என் - நீர் இவ்விடத்தில் [என்னிடத்தில்] நினைத்துவந்த காரியம் யாது? கரவாதுஉண்மையால் உள்ள ஆறு உரைமின் - ஒளிக்காமல் மெய்யாக உள்ளபடிசொல்லும்,' என்ன - என்று, இ பரிசினால் உரைப்ப - இந்தவிதமாகச் சொல்ல,- அன்னை - தாயான குந்தி, ஈன்று அற துறந்த அன்றையினும் - பெற்று (உடனே) நீங்கும்படி விட்ட அந்நாளினும் (அதிகமாக), நெஞ்சு அழிந்து- மனம்வருந்தி, இருகண் நீர் சொரிய - தனது இரண்டு கண்களினின்றும் நீர்பெருக, அலறி - கதறி, வாய்குழறிவார்த்தை தடுமாறி, நொந்து - வருந்தி,அழுதாள் - புலம்பினாள்; (எ - று.)
இங்கே'பெற்றமனம்பித்து, பிள்ளைமனங் கல்லு' என்ற பழமொழியை அறிக. 'உன்னி நீர் இங்கு வந்தது என்' என்பதற்கு - இப்பொழுது நீர் கருதிவந்ததனால் என்ன பயனென்று உரைப்பினும் அமையும். 'அறற்றுறந்த' என்றபாடத்துக்கு - அறல் - நீரிலே, துறந்த - விட்ட என்க; பழிக்கு அஞ்சி விட்டவளேயன்றி அன்பின்றி விட்டவளல்லளாதலால், அக்காலத்து மிகுந்த சோகமுற்றேயிருப்பள். விளைந்தது என இறந்தகாலத்தாற் கூறினது, இனித்தவறாதென்ற துணிவால். (316) |