வில்என்றபடி],- முரசு உயர்த்தவன் - முரசக்கொடியை உயர எடுத்துள்ள தருமபுத்திரன், முன்னி - ஆலோசித்து, மிகுந்த கோபமோடு - மிக்க கோபத்துடனே, 'யான் - நான், இனி - இனிமேல், வெம் பகை - கொடிய பகைவர்களான துரியோதனாதியரை, இ கணம் - இந்த க்ஷணத்திலேயே [மிகவிரைவில் என்றபடி], முடிப்பன் - அழிப்பேன்', என்னா - என்று கூறி,- வெம் சமர் மூள புகுந்த ஆறு எலாம் - கொடியபோர் உண்டாகும்படி நேர்ந்தவிதங்களையெல்லாம், ஓலையின் புறத்து - ஓலையில், (எழுதி), (அத்திருமுகங்களை), தன்னுடன் இயைந்தவர் தகும் தராதிபர் தமக்கு - தன்னுடன் மனமிணங்கினவரான தக்க அரசர்களுக்கு, தூதரின் போக்கினான்- தூதர்கள் மூலமாக அனுப்பினான்; (எ - று.) இங்கே'முகுந்தன் வாசகம்' என்ற விவரத்தைக் கீழ்ச் சருக்கத்தினிறுதியில் 264-ஆம் செய்யுளில் விளங்கக் காண்க. கேட்பதன் முன்னமே தூதரிற்போக்கினான் எனக் காரியத்தை முன்னும் காரணத்தைப் பின்னும் நிகழ்ந்தனவாகச் சொல்லுதல் மிகையுயர்வுநவிற்சியணி: கேட்டவுடனே சிறிதுங் காலதாமதஞ் செய்யாமல் அரசர்க்குத் தூதனுப்பினா னென்க. அம்மா- ஈற்றசை; அம்ம என்னும் அசைச்சொல் நீண்டதென்பது, தொல்காப்பியனார் கொள்கை. இனி, துரியோதனனது அக்கிரமங்களைக் கேள்விப்பட்ட மாத்திரத்திலே மிக்க பொறுமைசாலியான தருமபுத்திரனுக்கும் பெருங்கோப முண்டாய்விட்டதென்ற அதிசயம் பற்றிக் கவி கூறின வியப்பிடைச்சொல்லெனினும் அமையும். உத்தியோக பருவத்தின் முதலில் இவ்வரசர்கள் "இந்தவந்தணனீயிசைத்தனவெலா மியல்புடனினிதாக, அந்த வந்தனோடுரைத்த பின்னவனிதவனி தந்திலனாகில், முந்தவந்தண் மாமுரசகேதன திருமுகம் வரவிடுகென்று, வந்தவந்த மன்னவர்களுந் தத்தமாநகரடைந்தனர்" ஆதலால், இவர்களுக்குக் கண்ணன் தூதுபோய் வந்தவுடன் போர் செய்ய முடிந்ததைத் தருமன் தெரிவித்தான். முகுந்தன் என்பதற்கு - முத்தியுலகவின்பத்தையும் இவ்வுலக வின்பத்தையும் (தன் அடியார்க்குத்) தருபவனென்று பொருள்; மு - முக்தி. கு- பூமி, த - கொடுப்பவன். துஷ்ட அசுரர்கள் பலரும் கெட்ட அரசர்கள் பலரும் ஒருங்கே கூடி வசிப்பதாலுண்டான பூமிபாரத்தை நிவர்த்திசெய்யும்பொருட்டு அப்பூமிதேவியின் பிரார்த்தனையின்படி தேவர்கள் வேண்டுகோளால் திருமால் வசுதேவ குமாரனாய்க் கண்ணனாகத் திருவவதரித்தருளினான்; இது - திருமாலின் ஒன்பதாம் அவதாரம். முரசு -அதன் வடிவையெழுதிய கொடிக்கு இருமடியாகுபெயர். தனது வெற்றிக்கு அடையாளமாகவும் மங்களகரமாகவும் முரசத்தின் வடிவைத் தருமன் கொடியிற் கொண்டனன் போலும். (326) |