யிட்ட சருக்கத்தில்வந்ததுங் காண்க. பாண்டவர் வனவாசஞ் செய்கையில், ஒருநாள் துரியோதனன் தன் பெருமையைப் பாராட்டிப் பாண்டவரை அழுங்கச் செய்யவேண்டு மென்று ஆடம்பரத்துடனே அருகிற்சென்றபோது, இந்திரனேவலால் சித்திரசேனனென்னுங் கந்தருவராசன் வந்து துரியோதனனைக் கயிற்றாற் கட்டி வானத்தில் தூக்கிக்கொண்டுபோக, அப்பொழுது கர்ணன் முதலாயினோர் எதிர்த்துப்பொருது தோற்று ஓட, பின்பு துரியோதனனது பரிதாபகரமான நிலைமையை அவனது பரிவாரத்தா லறிந்த தருமபுத்திரனது கட்டளையால் வீமன் அருச்சுனனோடு சென்று கந்தருவனை வென்று துரியோதனனை மீட்டனனென்பது பின்னிரண்டடியிற் குறித்த கதை. அங்கிவேசமுனிவனிடத்தில் துரோணாசாரியனுடன் வில்வித்தையைக் கற்றுவந்தபோது 'எனக்கு இராச்சியங் கிடைத்த பின்னர்ப்பாதி உனக்குப் பங்கிட்டுக் கொடுப்பேன்' என்று அவனுக்கு வாக்குத் தத்தஞ் செய்திருந்த பாஞ்சாலராசனாகிய துருபதன் பின்பு ஒரு காலத்தில் அத்துரோணன் தன் குழந்தைக்குப் பாலுக்காகப் பசு வேண்டுமென்று சென்று கேட்டபொழுது முகமறியாதவன் போல் 'நீ யார்?' என்று வினவிச் சில பரிகாச வார்த்தைகளைச் சொல்லிச் சபையிற் பங்கப்படுத்த, அப்பொழுது அவன் 'என் மாணாக்கனாகிய இராசகுமாரனொருவனைக் கொண்டு உன்னை வென்று கட்டிக் கொணரச் செய்து உன் அரசையுங் கைக்கொள்வேன்' என்று சபதஞ் செய்துவந்து, பின் அங்ஙனமே அருச்சுனனைக் கொண்டு பங்கப்படுத்தி அப் பிரதிக்ஞையை நிறைவேற்றிவிட, யாகசேனன் துரோணன் மீது மிகக் கறுக்கொண்டு அவனைக்கொல்லும்பொருட்டு ஒரு புத்திரனும், அருச்சுனனது பலபராக்கிரமங்களைக் கண்டு மகிழ்ந்து அவனுக்கு மணஞ்செய்து கொடுக்கும் பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல்வேண்டும்' என்று புத்திரகாமயாகஞ் செய்விக்க, அவ்வோமத் தீயினின்றும் திருஷ்டத்யும்நனும், திரௌபதியுந் தோன்றினராதலின், 'கனற்றோன்றிய தோகை' எனப்பட்டாள். ஆசாரியசிஷ்யக்கிரமத்தை அனைவரும் அறிந்து அனுஷ்டித்து உய்யுமாறு சிஷ்யனுங் குருவுமாகிப் பதரிகாச்சிரமத்தில் எழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீமகாவிஷ்ணுவின் அமிசமாகிய நரன் நாராயணன் என்னும் முனிவர்களே இங்கு அருச்சுனனும் கிருஷ்ணனுமாகத் தோன்றினதனால், நரனென்று அருச்சுனனுக்கு ஒரு பெயர். இனி, நரனென்னும் மனிதனை யுணர்த்தும் பெயர், சிறப்பாய், அம்மனிதருட் சிறந்த அருச்சுனனை உணர்த்துவதெனக் கொள்ளலு மொன்று. வெம்மை - கனலுக்கு இயற்கை யடைமொழி; இனம்விலக்க வந்ததன்று. தோகையென்னும் மயில் வாலின் பெயர்; அதனையுடைய மயிலுக்குச் சினையாகுபெயரும், அம்மயில் போன்ற சாயலையுடைய பெண்ணுக்கு உவமையாகுபெயருமாதலால் இருமடியாகுபெயர். கனற்றோன்றிய தோகையென்றது மனிதர் வயிற்றிற் பிறவாத அவளது தெய்வத்தன்மையை விளக்கும். (மலர்களைக்கொண்டு) தொடுக்கப்படுவது தொடை எனக் காரணக்குறி. 'அத் தொடை |