(இ - ள்.) 'முந்து -முன்பக்கத்திலே, அரவு உயர்த்தோன் - பாம்புக் கொடியை உயர எடுத்துள்ள துரியோதனனது, ஓலை - திருமுகத்தை, முடி உடை அரசர் - கிரீடத்தையுடையவராய் அரசாளும் இராசாக்கள், காண்க - காண்பாராக;- வெம் திறல் ஐவரோடும் - கொடிய வலிமையையுடைய பஞ்சபாண்டவருடனே, (நமக்கு), வெம் சமர் விளைந்தது - கொடிய யுத்தஞ் செய்ய நேர்ந்தது; (ஆதலால்), தம் தம கிளைஞரோடும் - தங்கள் தங்களுடையசுற்றத்தாரோடும், சாதுரங்கத்தினோடும் - சதுரங்கசேனையோடும், வந்தவர்தமக்கே - (நமக்குத்துணையாக) வந்த அரசர்களுக்கே, வாழ்வு முழுதும் -எல்லா வாழ்க்கைகளும் (உண்டு) [பிறர்க்கில்லை],' என்று எழுதி -, விட்டான் -(அப்பத்திரிகைகளைத் தூதர்கள் மூலமாக எல்லா அரசர்களுக்கும்)அனுப்பினான்; (எ - று.)
இங்ஙனம் எழுதியதனால், துணை வேண்டும் பொழுதும் வணங்குத லில்லாது மிடுக்குடன் நிற்கிற துரியோதனனது செருக்கு விளங்கும். முந்து - இடப்பொருளுணர நின்ற இடைச்சொல்: இனி, வினைத்தொகையாகக் கொண்டு, சிறந்த எனினுமாம். பிறருடைய உதவி தனக்கு அவசியம் வேண்டுவதென்றற்கு, 'வெந்திறலைவர்' என்றான். அம்மா - வியப்பிடைச்சொல்; எல்லா வலிமைகளையுமுடையராய் அரசாட்சிசெய்கிற நம்மோடு அரசிழந்த பாண்டவர் படைதிரட்டிப் போர்செய்யவரலாயிற்றே என்றஅதிசயம் பற்றியது. தாம்தாம் என்ற அடுக்கு முதல் குறுகி, வருமொழி பன்மையாயிருக்கையில் வருதற்குரிய அ என்னும் ஆறனுருபை ஏற்றது. சாதுரங்கம் - யானை முதலிய நான்கு அங்கங்கள்; சதுரங்கமென்பதன் விகாரம்."முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே" என்ற தொல்காப்பியத்து உரிச்சொல்லியற் சூத்திரத்தால், முழுது என்பது - எஞ்சாமைப் பொருளுணர்த்துவதோர் உரிச்சொல். முரணுடையரசர் என்றும், தந்தமாக்கிளைகள் என்றும் பாடம்.
இதுமுதல் மேல் களப்பலியூட்டு சருக்கம் முடிகிறவரையில் இருபத்து நான்கு கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்; இவற்றில் மூன்று ஆறாஞ் சீர்கள் தேமாச்சீர்களாகவே நிற்கும். (338) 15.-இதுமுதல் ஏழுகவிகள் -பலதேசத்தரசர்கள் வந்து திரளுதலைக் கூறும். மித்திரரானமன்னர்விறலுடைத்துணைவரோடும் புத்திரரோடுந்தத்தம்போர்புரிசேனையோடுஞ் சத்திரநிழல்விடாததன்மையராகிச்சூழ மத்திரபதியும்வென்றிமருகருக்காகவந்தான். |
இதுவும், மேற்கவியும் - ஒருதொடர். இவற்றால், சல்லியன் துரியோதனனுக்குவஞ்சனைவழியால் துணைவனாய்விட்ட செய்தியைக் கூறுகிறார். |