பக்கம் எண் :

படையெழுச்சிச் சருக்கம் 311

மேனைய படைகளும் பயின்றான்" எனக் கீழ்க்குருகுலச்சருக்கத்திலுங்காண்க.
வீடுமனால் மணம் மறுக்கப்பட்ட அம்பை முடிவில் அவனது குருவான
பரசுராமனைச் சரணமடைய, அப்பிரான் தன்னருளால் விரைந்து வந்து
வீடுமனை அவளை மணஞ்செய்யும்படி வற்புறுத்த, விரதவுறுதியையுடைய
வீடுமன் அதனை மறுக்கவே, அது காரணமாக அவன் கோபங்கொண்டு
அறைகூவிப் பெரும்போர் செய்ய, அப்போரில் வீடுமன் பரசுராமனை
வென்றிட்டன னென்பது வரலாறு; இதனையுங் கீழ்க் குருகுலச் சருக்கத்திற்
காணலாம்.  பரசுராமனிடம் ஆவேசித்திருந்த திருமாலின் சக்தி
அத்திருமாலின்அமிசாவதாரமான ரகுராமனாற் கவர்ந்துகொள்ளப்பட்டு நீங்கினதாதலின் அவன்வீடுமனிடந் தோல்வியடைந்தன னென
உண்மையுணர்க.

    திருவடிக்குத் தாமரை யுவமை - செம்மை மேன்மை அழகுகளுக்கென்க.
பாதத்தைப் பங்கயமென்றதற் கேற்ப, 'சென்னியேந்தி' என்றார்.  பின்னே
'சென்னியேந்தி' என உருவகத்துக்கு ஏற்றவினை வந்ததனால், இங்கே
'பாதபங்கயம்' என்பதை, பங்கயம்போன்ற பாதமென, முன் பின்னாகத்
தொக்கஉவமைத் தொகையாகக் கொள்ளவேண்டுவ தில்லை.  பாதபங்கயஞ்
சென்னியேந்தி யென்றது, அவனுடைய திருவடிகளிலே தனது முடிபடும்படி
சாஷ்டாங்கமாக விழுந்து தண்டனிட்டு என்றபடி.  சிலைவேதமாவது - வில்
முதலிய ஆயுதங்களிற் பயிலும் வகைகளையும், சத்துருவை வெல்லுதற்குரிய
மந்திரம் முதலிய பிரயோகங்களையும், அறிவிக்கிற ஆயுதசாஸ்திரம்.  'அவன்
தனையும்' என்ற உம்மை - உயர்வுசிறப்பு;  அது மனிதர் தேவர் முதலாக
யாவரையும் திக்கு விஜயஞ்செய்து வென்ற இராவணனை எளிதிற்
சிறையிலிட்டகார்த்தவீரியார்ச்சுனன் முதலாக நிலவுலகத்து அரசர் பலரையும்
வேரறுத்தவெற்றியை விளக்கும்.  குரு - சந்திர வமிசத்திற் பிரசித்திபெற்ற
ஓரரசன்;இவனால் இக்குலம் குருகுல மென்றும், இக்குலத்தவர்
கௌரவரென்றும்,இந்நாடு குருநா டென்றும் பெயர் பெறுதல் காண்க. 
வேதம் என்பதற்கு -அறிவிப்பதென்று அவயவப்பொருள்; வித் என்னும்
வினைப்பகுதியினின்றுபிறந்தது.  'அரசர்வெஞ்சேனை' என்ற பாடத்துக்கு,
துரியோதன னெனத்தோன்றா எழுவாய் வருவிக்க.           (348)

படையெழுச்சிச் சருக்கம் முற்றிற்று.

-------