பக்கம் எண் :

முகூர்த்தங்கேள்விச் சருக்கம் 313

இழிவைத் தொனிப்பிக்கும். 'கயமையாவது -நற்குணங்கள் யாவுமிலராய
கீழோரது தன்மை,' என்றார், பரிமேலழகர்.  இனி, கய படு எனப் பிரித்து,
பெருமை யொழிந்த என்றாவது, மென்மை நீங்கின என்றாவது பொருள்
கொள்ளினும் அமையும்; "தடவுங் கயவு நளியும் பெருமை', "கயவென் கிளவி
மென்மையுஞ் செய்யும்" என்பன - தொல்காப்பியம்.  பயம்படு - பயம் + படு;
பயனற்ற என்றும், அச்சமொழிந்த என்றும், அச்சமுற்ற என்றும், அச்சந்தருகிற
என்றும் உரைப்பினும் அமையும்.  வயம் பட - (கண்ணன்) தன் வசப்பட
வென்றலுமாம்.  மல்லர் - ஆயுதமில்லாமலே கைகால் முதலிய
உறுப்புக்களைக்கொண்டு போர்புரியும் மல்லுத் தொழிலில் வல்லவர். (349)

2.-இதுவும் அடுத்தகவியும் - வீடுமன் துரியோதனனை
நோக்கிக் களப்பலிக்கு நிர்ணயம் செய்தல்.

அளப்பிலாச்சேனைநாதனடிபணிந்தவனிவேந்தன்
களப்பலிக்குரியார்யாவர்கடவநாள்யாவதென்னத்
தளப்பிலாமுகூர்த்தம்வல்லோன்சாதேவனல்லதில்லை
யுளப்பொலிவுடையாயின்றேயுற்றவற்கேண்மினென்றான்.

     (இ - ள்.) அவனி வேந்தன் -பூமியையாளும் அரசனான துரியோதனன்,
(பின்பு), அளப்பு இலா சேனை நாதன் அடி பணிந்து - அளவிடுதல் கூடாத
(தனது) சேனைகளுக்கெல்லாந் தலைவனான வீடுமனது பாதங்களை வணங்கி,
'களப்பலிக்கு உரியார் யாவர் - போர்க்களத்தில் (போர்தொடங்குதற்குமுன்
நம்மால்) பலிகொடுக்கப்படுதற்குத் தகுந்தவர் எவர்? கடவ நாள் யாவது -
அதற்கு ஏற்றநாள் எது?' என்ன - என்று கேட்க,- (அவ்வீடுமன்), தளப்பு
இலாமுகூர்த்தம் வல்லோன் - (பயன்) தவறுத லில்லாத நல்முகூர்த்தத்தை
அமைக்கவல்லவன், சாதேவன் அல்லது இல்லை - சகதேவனேயன்றி
வேறொருவருமில்லை,' (ஆதலால், உளம் பொலிவு உடையாய் -
மனவெழுச்சியையுடையவனே! இன்றே உற்று - இப்பொழுதே (அவனிடம்)
போய், அவன் கேண்மின் - அவனை (நீங்கள்) கேளுங்கள்', என்றான் -
என்று கூறினான்; (எ - று.)

     சிறந்ததொரு முகூர்த்தத்திற் சிறந்தஒருவீரனைப் போர்க்களத்திற்குரிய
தேவதைக்கு முன்னர்ப் பலிகொடுப்பவர், தவறாமல் வெற்றி பெறுவர் என்றல்
மரபு.  'நாள் செய்வது நல்லோருஞ் செய்யார்' என்றபடி சிறந்த நேரத்தில்
தொடங்கின காரியம் தவறாது பயன்தருதலால், 'தளப்பிலா முகூர்த்தம்
என்றது,தளம்பல் - நிலைகலங்குதல்.  உளப்பொலிவு உடையாய் -
மனவெழுச்சிகெடாதவனே! என்றுமாம்.  அவன் தங்கள் பக்கத்துக்காக நல்ல
நாள்அமைத்தற்குமுன்னமே சென்று கேட்டல் வேண்டுமென்பார், 'இன்றே'
என்றான்; ஏகாரம் - தேற்றவகையால் விரைவு குறிக்கும்.  அவற் கேண்மின் -
உயர்திணையில் ஐயுருபு தொக்கது; இரண்டாம் வேற்றுமைச் சிறப்புவிதியால்
உயர்திணைப்பெயரீறு திரிந்தது. 'கேண்மின்' என ஏவற்பன்மையாற் கூறினது.
துச்சாதனன் கர்ணன்