ஏழாவது களப்பலியூட்டு சருக்கம். பாண்டவர் தாம்வெற்றிபெறுதற்பொருட்டுப் போர்க்களத்துக்குரிய தேவதைக்குப் பலிகொடுக்கும் பாகம். 'களப்பலியூட்டுச் சருக்கம்' என்ற பாடத்துக்கு - களப்பலி ஊட்டுதலைக் கூறும் பாகமென்க. 1.-கடவுள் வணக்கம். குன்றெடுத்தாயர்மாதர்குரவைகொண்டொருவிளாவிற் கன்றெடுத்தெறிந்துவெய்யகாளியற்கிருதாணல்கி யன்றெடுத்திறுத்தவில்லேயனையவில்விழவுகாண்பான் சென்றெடுத்திறுத்துநின்றசெங்கண்மாலெங்கள்கோவே. |
(இ - ள்.) குன்று எடுத்து -(கோவர்த்தன) கிரியை (க் குடையாக) எடுத்துப் பிடித்து, ஆயர் மாதர் குரவை கொண்டு - இடைப்பெண்களோடு குரவைக் கூத்தாடி, ஒருவிளாவில் கன்று எடுத்து எறிந்து - ஒருவிளாமரத்தின்மேற் கன்றை யெடுத்து வீசி, வெய்ய காளியற்கு இரு தாள் நல்கி - கொடிய காளியனென்னும் நாகத்துக்கு (த் தனது) இரண்டு திருவடிகளையுங் கொடுத்து, அன்று எடுத்து இறுத்த வில்லே அனைய வில் விழவு காண்பான் சென்று - அக்காலத்தில் [முன்னொரு காலத்தில், ஸ்ரீராமாவதாரத்தில் என்றபடி] எடுத்து ஒடித்த சிவதனுசையே போன்ற [சிறந்த]வில்லின் திரு விழாவைப் பார்க்கும்பொருட்டுப் போய், எடுத்து இறுத்து நின்ற- (அங்கிருந்தவில்லை) எடுத்து ஒடித்து நின்ற, செம் கண் மால் - சிவந்ததிருக்கண்களையுடைய திருமாலின் திருவவதாரமூர்த்தியான கண்ணபிரான்,எங்கள் கோ - எங்கள் தலைவனாவன்; (எ - று.)-ஏ - தேற்றம். திருவாய்ப்பாடியில்ஆயர்களெல்லோருங் கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று சமைத்த சோற்றைக் கண்ணபிரான் அவனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்கு இடச் சொல்லித் தானே ஒரு தேவதாரூபங்கொண்டு அமுது செய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல மேகங்களை யேவிக் கண்ணன் விரும்பி மேய்க்கிற கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் கண்ணனுக்கு இஷ்டரான இடையருக்கும் இடைச்சியருக்கும் தீங்கு தரும்படி கல் மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணன் கோவர்த்தனமென்னும் மலையையெடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லாவுயிர்களையும் இடையூறு சிறிதுமின்றிக் காத்தருளின னென்பதும்;- கண்ணன் கோப ஸ்திரீகளுடனே ராஸக்கிரீடை செய்கையில், தான் விரைவாய்ப்பாயும் லாகவ சமத்காரத்தினாலே, தன்னை விட்டு நீங்க மனமில்லாமல் தன் கையையே தனித்தனி பிடித்திருக்கக் கருதிய அவ்வாயர்மகளிர் யாவர்க்கும் |