அதர்வணவேதத்தின் ஒரு பகுதிபோலும். "அருகு நடிப்பன அலகைகள் பாடுவ யாமள வாரணமே" என்பர் மேற்பதினாறாம் போர்ச் சருக்கத்தும். ஆண்டகை - பண்புத்தொகையன்மொழி. கன்னி-கந்யா என்பதன் திரிபு; இளமகளென்று பொருள். பகடு - யானை எருமை பசு இவற்றின் ஆண்பாற்பெயர். ஈங்கு, எருமைக் கடா என்னலுமாம். 'ஈர்ந்து' என்றும் பாடம். (361) களப்பலியூட்டு சருக்கம் முற்றிற்று. ---------- எட்டாவது அணிவகுப்புச் சருக்கம். பாண்டவருந் துரியோதனாதியருந் தத்தஞ்சேனைகளைப்பகுத்து ஒழுங்குப்படுத்திப் போருக்குச் சித்தஞ்செய்யுஞ் செய்தியைக் கூறும் பாகம். அணி - வரிசை. வகுப்பு - வகுத்தல். தொழிற்பெயர்: பு - விகுதி. இச்சருக்கத்தில், முதற்பதினாறு கவிகள்-பாண்டவர் அணி வகுத்தலையும், பின்பதினெட்டுக் கவிகள் துரியோதனாதியர் அணி வகுத்தலையும் கூறும். இந்தச் சருக்கத்திற் கடவுள் வாழ்த்துச் செய்யுள் காணப்படவில்லை; மாநஸிகமாத்திரமாகக் கடவுள்வணக்கம் நிகழ்ந்துவிட்டதென்றாவது, கடவுள் வாழ்த்தாக நூலாசிரியராற் பாடப்பட்டதொரு செய்யுள் பிற்காலத்தில் ஏடெழுதுவோரால் எழுதாது விடப்பட்டு எஞ்சிய தென்றாவது, இச்சருக்கத்து முதற்செய்யுளில் போருக்குச் செல்லவேண்டும் வகையைக் கண்ணன் சுவேதனுக்குக் கூறினானென்பதுவே வஸ்துநிர்த்தேசரூபமான மங்களமாக ஆசிரியராற் கருதப்பட்ட தென்றாவது கொள்க. வேறு. 1.-கண்ணன் படையெடுத்துச்செல்லும்படி சுவேதனுக்குக் கட்டளையிடுதல். மற்றைநாள்வசுதேவன்மாமகன்மண்டலீகருமன்னருஞ் செற்றுநீடவைபுக்கிருந்தசிவேதனோடிவைசெப்பினான் இற்றைநாளதிரதர்மகாரதர்சமரதாதியரெவரொடுங் கொற்றவஞ்சிமிலைச்சியேகுககுருநிலத்திடையென்னவே. |
(இ - ள்.) மற்றை நாள் - மறுநாள் உதயத்திலே, வசுதேவன் மாமகன் - வசுதேவனது சிறந்த குமாரனான கண்ணபிரான், மண்டலீகரும் மன்னரும் செற்றும் நீடு அவை புக்கு - மண்டலாதிபதிகளான அரசர்களும் (மற்றும் பல வகையான) அரசர்களும் நெருங்கியுள்ள பெரிய பாண்டவ சபையிற்சென்று, இருந்த சிவேதனோடு - (அங்கு வந்து) வீற்றிருந்த (பாண்டவ சேனாதிபதியான)சுவேதனுடனே, |