பக்கம் எண் :

336பாரதம்உத்தியோக பருவம்

     (இ -ள்.) முரசம் ஒத்த - பேரிகை முழக்கத்தைப் போன்ற, சொல் -
(கம்பீரமான) சொற்களையுடைய, அரசர் -,-கொடி - துவசங்கள், நெருக்கவும் -
இடைவிடாது செறியவும், மதி என திகழ் குடை - பூர்ண சந்திரன் போல
விளங்குகிற வெண்கொற்றக் குடைகள், நெருக்கவும் -, நடை கொள் ஆள்
அடி - நடத்தலைக் கொண்டபதாதிகளின் கால்கள், நெருக்கவும்-, இபம் -
யானைகள், நெருக்கவும்-, அயம் - குதிரைகள், நெருக்கவும்-, எழு துகள்
பொடி - மேலெழுகிற புழுதிகள், நெருக்கவும்-, வளர்புயத்தொடு புயம்
நெருக்கவும் - [உயர்ந்தும் பருத்தும்] வளர்ந்த (தமது) தோள்களோடு (பிறர்)
தோள்கள் அடரவும், ஒளி அறா முடி நெருக்கவும் - பிரகாசம் நீங்காத
கிரீடங்கள் (ஒன்றையொன்று) உராயவும், (ஒருவரையொருவர்), முறை -
முறையே, நெருக்கினர்-; (எ - று.)

     தன்மைநவிற்சியணி; முரச மொத்த சொல் - உவமையணி.  மதி -
(யாவராலும்) மதிக்கப்படுவதெனக் காரணப்பெயர்.  சந்திரன் - குடைக்கு
வட்டவடிவாலும் தண்மையாலும் வெண்ணிறத்தாலும் மேல் விளங்குதலாலும்
உவமை.  நடையென்னுந் தொழிற்பெயரில், நட என்னும் பகுதி ஈற்றகரம்
தொக்கது.  துகட்பொடி - ஒருபொருட்பன்மொழி, செவிக்குச் சொல்லின்பந்
தோன்ற நின்றது; என்றது, நுண்தூளிகளை யாகலாம்.  'நடைகொள் தேரடி'
எனவும் பாடம்.                                        (371)

11.-இது - தேர்த்துவசவருணனை.

பகன்மறைத்திருள்வரவிடுத்தெளிபவனமெய்க்கதியுடனுலாய்
அகனிலத்திடைவருநதிப்புனலருவருத்துயர்நதியின்வாய்
உகள்வரிக்கயலினமுமொத்தனவுடுகுலத்துடனொளிர்பெருங்
ககனவட்டமுமறையவிட்டனகவசமொத்தனதுவசமே.

     (இ -ள்.) துவசம் - கொடிச்சீலைகள்,- பகல் மறைத்து - (மேலே தாம்
நெருங்கிப்பரந்திருத்தலால்) சூரியனொளியை மறைத்து, இருள் வர விடுத்து -
(அதனால்பூமியிலே) இருளை வரும்படி செய்து, எறி பவனம் மெய் கதியுடன்
உலாய் - வீசுகின்ற காற்றினது உண்மையான சஞ்சாரத்துக்கு ஏற்ப அசைந்து,
அகல் நிலத்திடை வருநதி புனல் அருவருத்து உயர் நதியின்வாய் உகள் வரி
கயல் இனமும் ஒத்தன - பரந்த பூலோகத்தினிடத்திலே ஓடுகின்ற
நதிகளெல்லாவற்றின் நீரையும் (மிக்கசுவையுடைத்தன்றென்று) வெறுத்து
மேலுள்ள ஆகாசகங்கா நதியில் (சென்று) சஞ்சரிக்கிற (உடம்பிற்)
கோடுகளையுடைய கயல்மீன்களின் கூட்டத்தையும் போன்றன; உடுகுலத்துடன்
ஒளிர் பெரு ககனவட்டமும் மறைய இட்டன கவசம் ஒத்தன - நக்ஷத்திரக்
கூட்டத்தோடு விளங்குகிற பெரிய ஆகாய வட்டமும் மறைபடும்படி போகட்ட
கவசத்தையும் போன்றன; (எ - று.)

     தற்குறிப்பேற்றஉவமையணி. உகளுதல் - பிறழ்தல், புரளுதல். கயல்
- மீனின் ஓர்சாதி.  விட்டன எனப் பதம்பிரித்தல் சிறவாதாம்.  கவசம் -
உடம்பின்மேற்சட்டை.  'இனமொடொத்தன' எனவும் பாடம்.      (372)