12.-இது - அறுவகைத் தானைவருணனை. உறவின்மிக்கவர்பகையினெய்த்தவருதவுமப்படை குடைநிழற் செறிதலத்தினில் வளர்நகர்ப்படை திரள்வனப்படைபொருள்விலைத் தறுகண்மெய்ப்படையுறுதியிற்பொருதமதகப்படையெனவிராய் அறுவகைப்படைகளும்வகுத்தனவணிகளுட்கினபணிகளே. |
(இ -ள்.) உறவில் மிக்கவர் (உதவும் அ படை) - (பந்துத்துவம் சிநேகம் முதலிய) சம்பந்தத்திலே மிகுந்த துணைவர்கள் (தமக்கு) உதவியாகக் கொடுத்த அந்த சேனையும் [துணைப்படையும்], பகையின் எய்த்தவர் உதவும் அ படை - பகைமையினால் (தம்மோடு எதிர்த்துப் போர்செய்து) தோற்றவர்கள் (தமக்குத்) திறைகொடுத்த அந்தச் சேனையும் [பகைப்படையும்], குடை நிழல் செறிதலத்தினில் வளர் நகர் படை - (தமது) குடையின் நிழலிலே [அரசாட்சியிலே] பொருந்தின நாட்டிலுள்ள நகரங்களினின்று வந்த சேனையும் [நாட்டுப்படையும்], வனம் திரள் படை-காட்டினின்று திரண்டு வந்தசேனையும் [காட்டுப் படையும்], பொருள் விலை தறுகண் மெய் படை - (தாம் கொடுக்குந்)திரவியமாகிய விலையைப் பெற்றுக்கொண்டு ஊழியஞ் செய்யும் அஞ்சாமையையும் (வலிய) உடம்பையுமுடைய சேனையும் [கூலிப் படையும்], உறுதியின் பொரு தமது அகம் படை - நெஞ்சுறுதியோடு போர் செய்கிற தம்முடைய அந்தரங்கமான சேனையும் [மூலப்படையும்], என - என்று, அறுவகை படைகளும் - அறுவகைச் சேனைகளும், விராய் - சேர்ந்து, அணிகள் வகுத்தன - அணி வகுக்கப்பட்டனவாக, (அப்பொழுது), பணிகள் உட்கின - (கீழிருந்து பூமியைத் தாங்குகின்ற) நாகங்கள் (பராமிகுதியை நோக்கி)அஞ்சின; (எ - று.) எய்த்தவர் - இளைத்தவர். நீதிதவறாது குடிகளுக்கு நன்மையைச் செய்யும் அரசாட்சியைக் குடைநிழலென்றல், கவிமரபு. இனி, பொருள் விலை - பொருளுக்குத் தம்மை விற்றல் செய்கிற என்றும் உரைக்கலாம். மெய்ப்படை- தொழிலில் உண்மையுள்ள சேனை யென்றுமாம். அறுவகைப்படையுள்ளும்,மூலபலம் - மற்றையவை போல அப்பொழுதப் பொழுது அரசனாற்சேர்க்கப்படுவதன்றி, முன்னோர் தொடங்கிவந்து அரசனிடத்தேதொன்றுதொட்டு உளதாகி வரும் அன்புடைமையும் தனக்கு அழிவுவருங்காலத்தும் அஞ்சி நீங்காத வன்புடைமையுமாகிய சிறப்பை யுடைமையால்'உறுதியிற் பொருதமதகப்படை' எனப்பட்டது. "உலைவிடத் தூறஞ்சாவன்கண்தொலைவிடத்துத், தொல்படைக் கல்லாலரிது", என்றார், தெய்வப்புலமைத்திருவள்ளுவனாரும். இதனை இறுதியில் நிறுத்தினதற்குக் காரணமும் இதுவே. பணம் - படம். 'வகுத்தன' என்பதை முற்றெச்சமாகக் கொண்டுஉரையாவிடின் ஏக வாக்கியமாகாமற் பின்னவாக்கியமாகிப் பொருள் சித்தியாதுஎன்பர். (373) |