(இ -ள்.) இவன் - உலூகன், ஆங்கு - அவ்விடத்தில் [உபப்பிலாவியத்தில்], அவர்க்கு - அப்பாண்டவர்களுக்கு, அவண் நிகழ்ந்தன எலாம் - அவ்விடத்து [அத்தினாபுரியிலே] நடந்த செய்கைகளையெல்லாம், அரு தகையுடன் சொல்லி - (பிறருக்கு) அருமையான தகுதியுடனே சொல்லி, ஈங்கு வந்து - இவ்விடத்தில் [துவாரகையில்] வந்து, எழில் யாதவற்கு - அழகையுடைய ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திக்கு, இயம்பலும் - சொன்னவளவிலே, யாதவன் - அந்தக் கண்ணபிரான்,- மகிழ்வு உற்று - (அதுகேட்டு) மகிழ்ச்சியடைந்து, 'வாங்கு வெம் சிலை விசயனை - வளைந்த கொடிய வில்லையுடைய அருச்சுனனை, விரைவினில் வர விடுக - சீக்கிரத்தில் (இவ்விடம்) வரும்படி அனுப்புவாயாக,' என - என்று சொல்லி, மீள - மறுபடி, ஓங்கு மா தவம் உலூகனை - சிறந்த பெருந்தவத்தையுடைய உலூகமுனிவனை, போக்கினான் - (உபப்பிலாவியத்துக்கு) அனுப்பினான்; அவனும் - அவ்வுலூகனும், வந்து - (உபப்பிலாவியத்துக்கு) வந்து, உரைசெய்தான் - கிருஷ்ணபகவான் வரச்சொன்ன செய்தியை அருச்சுனனுக்குச் சொல்லி யருளினான்; (எ - று.) தகை -தகுதி; இது - தொழிலடியாகப் பிறந்ததாயினும், பொருளாற் பண்புப்பெயர். யாதவன் - யதுகுலத்தில் அவதரித்தவன்; தத்திதாந்தநாமம். துரியோதனன் பாண்டவர்க்கு இராச்சியத்தைக் கொடுத்தற்குச் சம்மதியாதது பாரதயுத்த மூலமாகப் பலரை ஒழித்துத் தான் அவதரித்த தன் காரியமான பூமிபாரநிவிருத்தியை விரைவில் நடத்துதற்குக் காரணமாகுமென்ற கருத்தால், கண்ணன் மகிழ்வு மிகுவானாயினன். அவர்க்கு அவண் நிகழ்ந்தன எலாம் - அப்பாண்டவர்கள் விஷயமாக அங்கு நடந்த வார்த்தைகளையெல்லாம், அருந்தகையுடன் சொல்லி - (பிறரிடத்தில்) அருமையான நற்குணங்களையுடைய தருமனுடனே கூறி என்று உரைப்பினும் அமையும்; இவ்வுரைக்கு, அருந்தகை - பண்புத்தொகையன்மொழி. தகையுறச் சொல்லி என்றும் பாடம். (21) உலூகன்தூது சருக்கம் முற்றிற்று. ------- இரண்டாவது வாசுதேவனைப் படைத்துணையழைத்தசருக்கம். அதாவது- வசுதேவகுமாரனான கண்ணபிரானைத் தம்தமக்குப் போரில் ஏற்ற துணையாகும்படி துரியோதனனும் அருச்சுனனும் ஒருங்கே சென்று கூப்பிட்ட வரலாற்றைக் கூறும் பாகமென்று பொருள். வாஸு தேவன் - வசுதேவகுமாரன்; காரணப்பெயர். இது திருமாலின் திருநாமங்களுள் ஒன்று. வாசுதேவனை யழைத்த என இயையும். படை - போர்செய்தல், பகைவரை யழித்தல்; சேனை யென்றும் பொருள். |