பலிகொடுத்தனர் - (சிறப்பித்துக்) கூறப்படுகிற போர்க்களத்துக்குரிய பலியாகக்கொடுத்துவிட்டார்கள், (பாண்டவர்கள்), என - என்று, செம் கண் அரவம் துவசம் மீளியும் உணர்ந்து - (கோபத்தாற்) சிவந்த கண்களையுடைய பாம்புக்கொடியையுடைய வீரனான துரியோதனனும் அறிந்து, தன் சேனை முதல்வற்கு உரை செய்வான் - தன்னுடைய சேனாதிபதியான வீடுமனுக்குக் கூறுபவனானான்; (எ - று.) - அதனை மேற்கவியிற் காண்க. வயப்படையென்றும், சயப்படையென்றும் கவியிரண்டையும் பட்சபாதமின்றிக் கூறினார். வய எனப் பிரித்தால், வலிமையென்று பொருள் படும் உரிச்சொல்லாம்; "வயவலியாகும்" என்றார் தொல்காப்பியனார். இப்பாட்டில் 'உரைசெய்குவம்' என்பதுவரையில் (கதாசம்பந்தமில்லாத) கவிக்கூற்று. கண்சிவத்தல் - கோபக்குறி. மீளி - வலிமையிற் சிறந்தவன்; ஆண்பாற் சிறப்புப்பெயர். முதல்வன் - முதன்மையுடையவன், முதல்வற்கு உரைசெய்வான் - நான்காமுருபு, கொடைப்பொருளின் பாற்படும். இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினெட்டுக்கவிகள் பெரும்பாலும் முதல் ஐந்துசீர்கள் விளங்காய்ச்சீர்களும், ஆறாஞ்சீர்தேமாச்சீரும், ஏழாஞ்சீர் புளிமாச்சீரு மாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள். (378) 18.-தனது சேனைவீரரைநால்வகைத் தேர்வீரராகப் பிரிக்கும்படி வீடுமனுக்குத் துரியோதனன் கூறுதல். கொதிகொள்சினநெஞ்சின்வலியின்றியவரஞ்சுபுகொடுத்தனர் களப்பலிநமக், கெதிரொருவர்நிற்குமவரில்லையெனும்வீரநிலையானறிவ னீயறிவையே, அதிரதர்கண்மாவிரதர்சமரதர்களர்த்தரதராகநம்மனீ கினியின்மா, மதுகைமுடிமன்னரைவகுத்தெழுகவென்றனன் மனத்தசை விலாதவலியோன். |
(இ -ள்.) 'கொதி கொள் சினம் - பொங்குதலைக்கொண்ட கோபத்தையுடைய, நெஞ்சின் - மனத்திலே, வலி இன்றி - தைரியவுறுதி யில்லாமல், அவர் - அப்பாண்டவர்கள், அஞ்சுபு - (நமக்குப்) பயந்து, களம் பலி கொடுத்தனர் - (நமக்குமுன்) போர்க்களத்துக்குரிய பலியைக் கொடுத்திட்டார்கள்; நமக்கு எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீரம் நிலை - நமக்கு எதிராக நிற்குந்தன்மையர் ஒருத்தருமில்லையென்கிற பராக்கிரமத்தன்மையை, யான் அறிவன் நீ அறிவையே - நான் அறிவேன், நீயும் அறிவாயன்றோ? (ஆதலின், இப்பொழுது), நம் அனீகினியில் - நமது சேனையிலுள்ள, மா மதுகை முடிமன்னரை - மிக்கவலிமையையுடைய கிரீடாதிபதிகளான அரசர்களை, அதிரதர்கள் மாஇரதர் சமரதர்கள் அர்த்தரதர்ஆக - அதிரதரும் மகாரதரும் சமரதரும் அர்த்தரதருமாக, வகுத்து - அணிவகுத்து, எழுக - (போருக்குப்) புறப்படுவாயாக' என்றனன்- என்று(வீடுமனைநோக்கிக்) கூறினான், மனத்து அசைவுஇலாத வலியோன் - மனத்திலே தளர்ச்சியில்லாத உறுதியையுடைய துரியோதனன்; |