கொண்டு வந்துவிட,அதுமுதல் கம்சனைக் கொல்லுகிறவரையில் இளம்பருவத்திலெல்லாம் கண்ணபிரான் அவ்வாய்ப்பாடியிலேயே பலவகைத் திருவிளையாடல்கள் புரிந்து வளர்ந்தருளினனென்பது வரலாறு. குடக்கூத்து, குரவைக்கூத்து முதலியன - இடையர்கள் தமது செல்வச் செருக்குக்கு அறிகுறியாகவும், பெரியோர்கள் கொண்டாடவும், தமது வாசஸ்தானமான முல்லை நிலமும் அதிலுள்ள பசுக்கள் முதலிய செல்வங்களும் எக்குறையுமின்றிச் செழித்துவளரவும் ஆடுவனவாதலால், 'யசோதை கண்களிப்ப நீடுதராதலம் விளங்க' எனப்பட்டது. குரவம்முல்லைநிலத்து மலராதலால், 'குராமணங்கமழுங் கூந்தற்கோவியர்' என அதனை எடுத்துக் கூறினார். குராவென்னும் மரத்தின் பெயர், பூவுக்கு முதலாகுபெயர், பசுக்களைக் காப்பவனென்னுங் காரணத்தால் இடையனுக்கு வடமொழியில் கோபனென்று பெயர்; அதன் பெண்பாலான கோபீ என்பது விகாரப்பட்டுக் கோவியென நின்று பலர்பால் விகுதியேற்றது. குரவையாவது - கைகோத்தாடுங் கூத்து;"குரவைக்கூத்தே கைகோத்தாடல்" என்பது நிகண்டு. பல நாட்டியப் பெண்கள் வட்டமாய் நின்று விசித்திரமான தாளலயைகளுடன் மெதுவாகவும் உன்னதமாகவும் கூத்தாடுதல், இதனிலக்கணமாம்; குரவையென்பது - காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச்செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனுங் கைபிணைந் தாடுவது; 'குரவையென்பது கூறுங்காலைச், செய்தோர்செய்த காமமும்விறலும், எய்தக்கூறு மியல்பிற்றென்ப' எனவும் 'குரவையென்ப தெழுவர்மங்கையர், செந்நிலைமண்டலக் கடகக் கைகோத்து, அந்நிலைகொட்ப நின்றாடலாகும்' எனவுஞ் சொன்னாராதலின்' என்பது, சிலப்பதிகாரத்து அடியார்க்குநல்லாருரை. கண்ணன் கோபஸ்திரீ களுடனே ராஸக்கிரீடை செய்கையில், தான் விரை வாய்ப்பாயும் லாகவ சமத்காரத்தினாலே, தன்னைவிட்டு நீங்க மனமில்லாமல் தன் கையையே தனித்தனி பிடித்திருக்கக்கருதிய அவ்வாயர் மகளிர் யாவர்க்கும் பக்கத்திலிருந்தவன் போலக் காணப்பட்டனனாதலால், கோவியர் குரவை கொண்ட புராதனனென்றது, "ஊருந்திரைப் பொன்னிநன்னீரரங்க வுருப்பலவாய்க், காருந்தடித்துங் கலந்ததுபோ லிடைக்கன்னியர்கள், யாருங்களிக்க விடையிடையே கலந்தின்ப நலங், கூருந்திருநடமாடிய மாயமென் கூறுகவே" என்றபடி ஏககாலத்தில் பலவடிவங்கொண்டு அவர்களிடையிடையே நின்று ஒவ்வொருத்தியது இவ்விருகைகளிலும் தன்கைகளிரண்டும் பொருந்த ஆடினதாகவுங் கூறுப. புராதநன்- மிகப்பழையவனென்று பொருள்; அநாதிமூர்த்தியென்க. ஏ - பிரிநிலை; இதனால்; தேவாதிதேவனான எம்பெருமானைத் திருவடிதொழுபவர் தேவதாந்தரங்களை அடைதல் கூடாதென்பது விளங்கும். "மறந்தும் புறந்தொழாமாந்தர்" என்றார் திருமழிசையாழ்வாரும். புநிதர் - பரிசுத்தராக்கப்பட்டவர், போற்றி - இங்கே தொழிற்பெயர்;இ - விகுதி. இப்பாட்டால், இந்நூலாசிரியர் தமக்குப்பாகவதர்களிடத்திலுள்ள பரமபக்தியை வெளியிட் |