மடைந்துவேண்ட,அவர் தசரதசக்கரவர்த்திகுமாரனாய் ஸ்ரீராமனாகத் திருவவதரித்து அரக்கர்கள் அனைவரையும் அழித்து நல்லோரைக் காத்தருளினர். துஷ்ட அசுரர்கள் பலரும் கெட்ட அரசர்கள் பலரும் ஒருங்கேகூடி வசிப்பதாலுண்டான பூமிபாரத்தை நிவிருத்தி செய்யும்பொருட்டு அப்பூமிதேவியின் பிரார்த்தனையின்படி தேவர்கள் வேண்டுகோளால் திருமால் வசுதேவகுமாரராய்ப் பலராம கிருஷ்ணர்களாகத் திருவவதரித்தார். கலியுகத்தின் இறுதியில் முமுவதுமழிகிற தருமத்தை நிலைநிறுத்தும்பொருட்டு மகிமையுடையதொரு குதிரையின் வடிவமாகத்தோன்றுவது, கற்கியவதாரம். காத்தற் றொழிற்குரியகடவுளான திருமால் பயிரைவளர்த்தற்குக்களையைப் பறித்தல்போலச் சிஷ்டர்களைப்பரிபாலனஞ்செய்யும் பொருட்டுத் துஷ்டர்களை நிக்கிரகிப்பதற்காக அருளாற் கொள்ளும் அவதாரங்கள் இவையென்றும், இவை மற்றையோரது பிறப்புக்கள் போலக் கருமசம்பந்தத்தால் உண்டாகுமவையன்றி, பகவானது இச்சாமாத்திரத்தால் வேண்டியபொழுது உதிப்பவையென்றும் உணர்க,. இப்பத்தவதாரங்களுள் பரசுராம பலராமாவதாரங்கள் ஆவேசாவதாரமென்றும், மற்றவை அம்சாவதாரமென்றும், அவற்றுள்ளும் ஸ்ரீ ராமகிருஷ்ணாவதாரங்கள் பூரணாவதாரமென்றும் கூறப்படும். மேரு -பூமி மத்தியில் இருக்கும் பொன்மயமானதொரு பெருமலை, நரவரி - மனிதவடிவமுஞ் சிங்கவடிவமுங் கலந்தமூர்த்தி. நரன் - மனிதன். அரி - சிங்கம் யானைமுதலிய பெரியவிலங்குகளையும் அரிக்கவல்லதென்று பொருள்; அரித்தல் - அழித்தல், 'மேருவை யெடுக்குந்தாள்' என அடைமொழிகொடுத்து வராகாவதாரத்தை விசேடித்தது மற்றைய அவதாரங்கள்போல உலகத்தாரது துன்பத்தைத்தீர்ப்பதன்றி உலகத்துக்கே நேர்ந்ததுன்பத்தைத் தீர்ப்பதும், அடியவர்களைக் காத்தலேயன்றி அடியவர்களுள் தலைவியான நிலமகளைக்காத்தலுமாகிய அவ்வவதாரத்தினது சிறப்புத் தோன்றவென்க. இரணியன் தனித்தனி மனிதர்களாலும் மிருகங்களாலும் தேவர்களாலுஞ் சாவதில்லையென்று வரம்பெற்றிருந்ததனால், அவனைக் கொல்லுதற்கு, மனிதத்தன்மையும் விலங்கின்தன்மையும் கலந்ததொருவடிவத்தை யெடுத்தருளினார். மிகச்சிறிய வாமன ரூபம் மிகப்பெரிய திரிவிக்கிரமரூபத்தை உள்ளடக்கிக் கொண்டிருந்த உயர்வுதோன்ற 'எண்ணருங்குறள்' எனப்பட்டது; "ஆலமர்வித்தினருங்குறளானான்" என்றும், "அற்புதனற்புதரேயறியுந்தன், சிற்பதமொப்பதொர்மெய்க்கொடு சென்றான்" என்றுங் கம்பர் கூறியவாறுங்காண்க. கம்பர் 'பயந்தவர்களுமிகழ்குறளன்' எனக்கூறியதற்கேற்ப எண்ணருங்குறள் என்பதற்கு - (வடிவத்தின் சிறுமையைப்பார்த்தவர் எவரும்) நன்கு மதித்தற்குக் கூடாத வாமனனென்றும் பொருள் கூறலாம். திரிகரணங்களுள் மற்றையவற்றின் செய்கைக்குக் காரணமான மனத்தினால் எண்ணுதற்கருமைகூறவே, வாயாற்சொல்லுதற்கும் கண்ணால் நோக்குதற்கும் அருமை தானே பெறப்படும். குறள் - சிறுமை, பண்புப்பெயர்; குறு - பகுதி, அள் - விகுதி, இது - பண்பாகுபெயராய், சிறுமை |