மீது உயர்ந்துதோன்றுகிற உறுப்புக்களுக்கு - ஆதிசேஷனது சூட்டோடுகூடிய தலைகளும், மதிலின்மேல் இழைக்கப்பட்டுள்ள இரத்தினங்களுக்கு ஆதிசேஷனது தலையிலுள்ள மாணிக்கங்களும் உவமையாம். இங்கு ஆதிசேஷன் வருவதற்கு, 'ஏடவிழ்துளபமாலங்கிருந்தனன் என்றுகேட்டு' எனக்காரணங் கற்பித்தபடி, இது - தற்குறிப்பேற்றவணி. சராசந்தனும் காலயவனனும் ஏககாலத்தில் மதுரையில் வந்து எதிர்த்தால் யாதவர்களுக்கு நாசமுண்டாகக் கூடுமென்று கருதிக் கண்ணன் மதுரையிலுள்ள குடிகளை வேற்றிடத்திற் சேர்ப்பிக்கும் பொருட்டுச் சமுத்திரராசனைப் பன்னிரண்டு யோசனை தூரம் இடம் விடும்படி கேட்டு அவ்விடத்தில் மிகவும் அழகாய்ப் புதிதாக நிருமித்துவைத்த துவாரகா நகரத்தை 'மூதூர்' எனப் பழையதாகக் கூறினது, அந்நகரம் பகவானது சங்கற்பத்தால், செயற்கைபோலத் தோன்றாமல் சிருஷ்டிகாலத்தில் இயற்கையாய்த் தோன்றினதுபோல அமைந்ததாதலினென்க; அன்றியும், கண்ணனது பழைய இராசதானியான மதுராபுரிபோலவே எல்லாம் அமைந்ததாதலின் மூது ரென்றதாகவுங் கொள்ளலாம். மாடம்- உபரிகை வீடு. தோற்றம் - தோன்றும் நிலை. சேடன் என்ற சொல்லுக்கு - (பிரளயகாலத்திலும் அழியாது) மிகுபவனென்று பொருள்; நித்திய னென்று கருத்து: சேஷித்தல் - விஞ்சுதல். இனி, சேடனென்பது - "சென்றாற்குடையாம் இருந்தாற் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள் கடலுள் - என்றும், புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்குமணையாம், திருமாற்கரவு" என்றபடி திருமாலுக்குப் பலபடியாக சேஷவிருத்தியை [அடிமைத்தொழிலை]ச் செய்வதால் வந்த பெயரெனினும் அமையும். மகுடம் என்னும் சொல், இங்கே தலைக்கு இலக்கணை. (25) இது - அகழியின் அமைதி கூறுகின்றது. 5. | கார்க்கடல்வண்ணன்றன்பாற்கண்டுயிலொழிந்துபோந்து மேற்கடற்றுவரைமூதூர்மேவரும்விரகுநோக்கிப் போர்க்கடற்பொறிகள்யாவும்பொறித்தவப்புரிசைதன்னைப் பாற்கடல்வளைத்ததொக்கும்பன்மலரகழியம்மா. |
(இ -ள்.) பல்மலர் - பலவகையான புஷ்பங்களையுடைய, அகழி - அகழியானது,- பால் கடல் - திருப்பாற்கடல், கார் கடல் வண்ணன் - கருங்கடல் போன்ற திருநிறத்தையுடைய திருமால், தன்பால் - தன்னிடத்தில், கண் துயில் ஒழிந்து - யோகநித்திரை செய்தலைவிட்டு, போந்து - சென்று, மேல் கடல் துவரை மூதூர் மேவரும் - மேற்கடலிலேயுள்ள துவாரகையாகிய பழைய நகரிலே எழுந்தருளி யிருக்கிற, விரகு - உபாயத்தை, நோக்கி - பார்த்து, - போர் கடல் பொறிகள் யாவும் - போராகிய கடலைக் கடத்தற்கு உரிய (ஆயுதரூபமான) பலவகை யந்திரங்களையும், பொறித்த - தாங்கிய , அ புரிசை தன்னை - அந்த (த்துவாரகாநகரத்தின்) மதிலை, வளைத்தது - வந்துசூழ்ந்ததை, ஒக்கும் - போலும்; (எ - று.)- அம்மா - ஈற்றசை; அவ்வகழியின் ஆழம் பரப்பு முதலியவற்றைக் கருதின வியப்புப்பற்றி வந்ததுமாம். |