பக்கம் எண் :

உலூகன் தூது சருக்கம் 5

யுடைய வடிவத்தைக்குறிக்கும்.  இரண்டடியளவுள்ளதற்குக் குறளென்றும்,
மூன்றடியுயரமுள்ளதற்குச் சிந்தென்றும் பெயர்; அதனை யாப்பிலக்கணத்தில்,
இரண்டடிவெண்பாவைக் குறள் வெண்பாவென்றும், மூன்றடிவெண்பாவைச்
சிந்தியல்வெண்பாவென்றும், இருசீரடியைக் குறளடியென்றும், முச்சீரடியைச்
சிந்தடியென்றும் கூறுவதுகொண்டும் உணர்க.  கூன் நல் எனப்பிரித்து,
வளைவையும் நன்மையையும் உடைய எனவும் பொருள்கொள்ளலாம்.  நன்மை
- அழகும் துஷ்டநிக்கிரகமும்.  வாய் - வெட்டுமிடம்.  பரசுராமர்
பிராமணகுமாரராயிருந்தும் தமது தந்தையின் கருப்போற்பத்திக்குக் காரணமான
சருவினது [சரு - ஒருவகைச் சோறு] பேதத்தால் கோபம் தாபம் போர் வெற்றி
பலம் பராக்கிரமம் முதலிய க்ஷத்திரியாசாரமுடையவரான தன்மை தோன்ற,
அவரை 'கோ' என்ற பெயராற்கூறினார்; இனி, அரசர்களனைவரையும்
வேரறுத்து அவர்களுடைய இராஜ்யத்தையெல்லாம் தனதாக்கிக்கொண்டு, பின்பு
காசியபமுனிவருக்குத் தானஞ்செய்த பெருந்தகைமைபற்றி, 'கோ' என்றதாகவுங்
கொள்ளலாம்.  அரக்கர் - படைத்தற்கடவுளான பிரமதேவர், ஆதியில்
நீரைப்படைத்து அதனைக்காக்கும் பொருட்டுச் சிலபூதங்களைச் சிருஷ்டித்து
'நீங்கள் இதனைக்காக்கக்கடவீர்' என்றபோது, அவர்களிற்பசியுற்ற சிலர்
"ஜக்ஷாம் [உண்ணக் கடவேம்]" என்றும், பசியுறாத சிலர் 'ரக்ஷாம்
[காக்கக்கடவேம்]' என்றுங்கூற, அதுகேட்டு அக்கடவுள், ஜஷாம் என்றவர்
யக்ஷராகக் கடவரென்றும், ரக்ஷாம் என்றவர் ராக்ஷஸராகக்கடவரென்றும்
அருளிச் செய்ததனால், யக்ஷர் என்று ஒரு குலத்தாரும், ராக்ஷஸர் என்று
மற்றொரு குலத்தாருற் மாயினரென நூல்கள் கூறும்.  இவர்கள் பின்பு
அளவில்லாத வலிமைபெற்று மிகச்செருக்குற்று உலகத்துக்குத் துன்ப
மியற்றுபவரானார்கள்.  "அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி" என்றபடி
இராமபிரான் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளுகையில் அயோத்தியிலுள்ள சகல
பிராணிகளுக்கும் ஸ்ரீ வைகுண்டமளித்த மகிமை விளங்க, அவரை
"வானநாயகன்" என்றார்.  வான் என்ற ஆகாயத்தின் பெயர் - இங்கே
இலக்கணையாய், எல்லா வுலகங்களுக்கும் மேலுள்ள மோக்ஷ சமமான ஸாந்தா
நிகமென்னும் லோகத்தை உணர்த்திற்று; இனி, வான் - இடவாகுபெயராய்,
வானநாயகன் - பரமபதத்திலுள்ள நித்தியசூரிகளுக்குத் தலைவனென்றுமாம்.
இனி, வானநாயகன் - தேவாதிதேவனுமாம்; உபேந்திர மூர்த்தியுமாம்.  வானம்
- மூலப்பிரகிருதியுமாம்.  நின்ற என்றது - தான் அவதரித்த காரியமாகிய
பூமிபாரநிவிருத்தியை நிறைவேற்றும்பொருட்டுப் பாண்டவ சகாயனாய்க்
காலம்நோக்கியிருந்த தன்மையை விளக்கும்.  மால் - பெருமை;
அதனை யுடையவனுக்குப் பண்பாகுபெயர்; இனி, மால் -  விருப்பமாய்,
அதனை எல்லா உயிர்களிடத்திலுங் கொண்டவனும், எல்லாராலும்
விரும்பத்தக்கவனுமானவனென்றும் பொருளுரைக்கலாம்.  திருவடி களுக்குத்
தாமரைமலர் உவமை, செம்மை, மென்மை, குளிர்ச்சியழகுகளுக்கென்க.
"அன்று நான்பிறந்திலேன்" என்றாற்போல 'மறவேனே' என்றார்.