அருச்சுனனும் கிருஷ்ணனும் தருமபுத்திரனுள்ள விடத்துச்செல்லல்.
20. | கூறியவேகநாகக்கொடியவனகன்றபின்னர்த் தேறியவிசயனோடுஞ்செழும்புனற்றுவரைநீங்கி யாறிருநாமத்தோனுமையிருநாமத்தோனும் ஊறியகருணைநெஞ்சினுதிட்டிரனிருக்கைபுக்கார். |
(இ - ள்.) கூறிய - (இவ்வாறு)சொன்ன, வேகம் நாகம் கொடியவன் - உக்கிரமான பாம்பின்வடிவத்தையெழுதின துவசத்தையுடைய துரியோதனன், அகன்றபின்னர் - (துவாரகையினின்று) நீங்கிச் சென்றபின்பு, (கண்ணபிரான்) தேறிய விசயனோடும் - (தான் படைத்துணையாதற்கு உடன்பட்டதனால்) மனந்தேறின அருச்சுனனுடனே, செழு புனல் துவரை நீங்கி - மிகுந்த நீர்வளத்தையுடைய துவாரகாபுரியினின்று புறப்பட்டு, (விரைவில்), ஆறு இரு நாமத்தோனும் ஐ இரு நாமத்தோனும் - பன்னிரண்டு திருப்பெயர்களையுடைய அக்கண்ணனும் பத்துத்திருப்பெயர்களையுடைய அருச்சுனனும், ஊறிய கருணை நெஞ்சின் உதிரட்டிரன் இருக்கை புக்கார் - மேன்மேற் சுரக்கின்ற அருளையுடைய மனத்தையுடைய தருமபுத்திரனது இருப்பிடத்தை [உபப்பிலாவியத்தில் அரண்மனையை] அடைந்தார்கள்; (எ - று.) வேகம் - விரைவுமாம். ஏகம் எனப்பதம் பிரித்து, ஒப்பற்ற எனினுமாம். ஆறிருநாமத்தோன் - துவாதசநாமன்; அத்திரு நாமங்கள் - கேசவன்,நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதநன், திரிவிக்கிரமன்,வாமனன், ஸ்ரீதரன், இருடீகேசன், பதுமநாபன், தாமோதரன் என்பவை. ஐயிருநாமம் - 'பார்த்தனருச்சுனன் கரியோன் விசயன், பாகசாதனி சவ்வியசாசிபற்குனன்பாரேத்து தனஞ்சயன் கிரீடி சுவேதவாகன் எனும் நாமம் படைத்த பிரான்' எனக் கீழ்த் தீர்த்தயாத்திரைச் சருக்கத்திற் கூறியவை. ஆறிரு நாமம், ஐயிருநாமம்என்பன - பண்புத்தொகைப் பன்மொழித்தொடர். இருக்கை - இருத்தல்: இருப்பிடத்துக்குத் தொழிலாகுபெயர். தேறிய விசையினோடும் என்ற பாடத்திற்கு - மிக்க விரைவுடனே யென்க. (41) வாசுதேவனைப் படைத்துணையழைத்தசருக்கம் முற்றிற்று. ------ |