மூன்றாவது சஞ்சயன் தூதுசருக்கம். சஞ்சயனென்னும் முனிவன் திருதராட்டிரனதுவேண்டுகோளின்படி பாண்டவரிடம் தூது வந்த செய்தியைச் சொல்லும் பாகம். சஞ்சயன் கவல்கணனென்பவனது குமாரன். ஆதலால், இவனுக்குக் காவல்கணியென்று ஒரு பெயரும் வழங்கும். இவன் திருதராட்டிரனுக்கு மிகவும் இஷ்டனான நண்பன்; இவன் அவனுக்குச் சில சமயங்களில் தேர் செலுத்துதலுமுண்டு. கடவுள் வணக்கம் 1. | ஒருதலத்திடையவதரித்தணிபொதுவர்சிற்குடிலுறைவதோர் மரகதப்புயறனையெடுத்தொருமகவெனத்தனதிறுதியால் அரிதுபற்றியவலகைசெற்றிடவணிமுலைப்பயநுகர்வுறா மருதிடைத்தவழ்பொருவில்வித்தகன்மலரடிக்கண்வழுத்துவாம். |
(இ - ள்.) ஒரு தலத்திடை - ஓரிடத்திலே[வடமதுரையில் என்றபடி], அவதரித்து - திருவவதாரஞ்செய்து, அணி பொதுவர் சில் குடில் - அழகிய இடையர்களது சிலவான குடிசையிலே (மற்றோரிடத்தில் என்றபடி), உறைவது - வசித்தருளுந்தன்மையதான, ஓர் மரகதம் புயல் - ஒப்பற்ற பச்சையிரத்தினமும் மேகமும் போன்ற நிறத்தையுடையவனும்,- தனது இறுதியால் - தனது [பூதனையின்] மரணகாலம் சமீபித்ததனால், தனை ஒரு மகவு என எடுத்து - தன்னை [கண்ணனை] ஒரு சாதாரண சிறு குழந்தையைப்போலக் கையிலெடுத்து, அரிது பற்றிய - அருமையாகப் பிடித்திருந்த, அலகை - பேய் மகளாகிய பூதனையை, செற்றிட - கொன்றிடும்பொருட்டு, அணி முலை பயம் - அழகிய (அவளது) தனத்தின் பாலை, நுகர்வுறா - குடித்தருளி, மருதிடை தவழ் - (பின்பு ஒரு காலத்தில் இரட்டை) மருதமரங்களிடையிலே தவழ்ந்து சென்ற, பொருவு இல் வித்தகன் - ஒப்பில்லாத ஞானவடிவமானவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியினது, மலர் அடிக்கண் - செந்தாமரைமலர் போலுந் திருவடிகளை, வழுத்துவாம் - துதிப்போம்; (எ - று.) "ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்,ஒருத்திமகனா யொளித்துவளர" எனப் பெரியார் அருளிச்செய்தபடி திருமதுரையில் வசுதேவகுமாரனாய்த் தேவகியின் திருவயிற்றில் உதித்துத் திருவாய்ப்பாடியில் நந்தகோபர்மனையில் யசோதையின் திருமகனாய் வளர்ந்தருளின கண்ணனது தன்மையை 'ஒரு தலத்திடை யவதரித்தணிபொதுவர் சிற்குடி லுறைவது' எனக் கூறினார். கண்ணன் வளர்தற்கு இடமாதற்கேற்ற மகிமை [தவப்பயன்] உடைமையாலும், கண்ணனுக்கு மதுரையினும் ஆய்ப்பாடி இனியதாயிருந்ததனாலும், முன்பு எளிய காடாயிருந்தது கண்ணனது திருக்கடைக்கண்ணின் அருள் நோக்குமாத்திரத்தால் பின்பு மிகச் செழிப்படைந்ததனாலும், பொதுவர் சிற்குடிலுக்கு அணியென்று அடைமொழி கொடுத்தது. |