தரு காளை பரிந்து சொற்றதும் -யமதருமராசன் பெற்ற புத்திரனான யுதிட்டிரன் (இராச்சியத்தில்) விருப்பங்கொண்டு சொன்ன வார்த்தையையும், வீமன் நின்று பகர்ந்ததும் - வீமசேனன் (கோபத்தோடு) நின்று சொன்ன வார்த்தையையும், குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் - குருந்தமரத்தை முறித்தருளின மேகம்போன்ற கண்ணபிரான் கூறியருளிய வார்த்தையையும், அவனிபனுடன் - திருதராஷ்டிர மகாராசனுடனே, உண்மை ஆம் வகை கூறினான் - உண்மையாகிய வகையிலே சொல்லியருளினான்; (எ - று.) வந்த பிரயாணம் பயன்படாமல் உடனேமீண்டு சென்றமை தோன்ற, 'மீள அத்தினபுரியடைந்து' எனப்பட்டது. நீர் நிரம்பின கடல்போலத் தவம் நிரம்பின முனிவனென்பார், 'தவக்கடல்' என்றார். படி - வகையென்னும் பொருள்தரும் இடைச்சொல். அறன் என்பதை இறுதிப்போலிபெற்ற தெய்வமுணர்த்தும் அஃறிணைப்பெய ரென்றாவது, அறம் என்னும் அஃறிணையின்மேற் பிறந்த உயர்திணைப்பெயரென்றாவது கொள்க. காளை - இளவெருது; இது இங்கே யுதி்ட்டிரனுக்கு உவமவாகுபெயர்; இது - வீரனுக்கு நடை வலிமை காம்பீரியங்களால் உவமையாம். கம்சனாலேவப்பட்டு வந்த அசுரர்களுள் ஒருவன் அழகியதொரு குருந்த மரத்தின் வடிவங்கொண்டு கண்ணன்மேல் விழுந்து அவனைக் கொல்வதாக இருக்கையில், அம்மரத்தைக் கண்ணபிரான் விளையாட்டாக முறித்தருளினானென உணர்க. (60) சஞ்சயன் தூதுசருக்கம் முற்றிற்று. ------- நான்காவது கிருட்டிணன் தூது சருக்கம்.
ஸ்ரீகிருஷ்ணபகவான் பாண்டவர்க்காகத் துரியோதனனிடத்துத் தூது சென்ற வரலாற்றை யுணர்த்தும் பாகம். க்ருஷ்ணன் என்ற வடமொழிப் பெயர் - கருநிறமுடையவனென்றும், (யாவர் மனத்தையும்) கவர்பவனென்றும், (எல்லாத்தொழில்களையுஞ்) செய்பவனென்றும், அசுரர்களுயிரைப் பறிப்பவனென்றும், மற்றும் சிலவகையாகவும் பொருள்படும். கிருட்டிணனது தூது என ஆறாம்வேற்றுமைத்தொகை. கிருஷ்ணன் - திருமாலின் ஒன்பதாம் அவதாரமூர்த்தி; வசுதேவர்க்கும் தேவகிக்கும் திருமகனாய்த் திருவவதரித்து, இடையர் தலைவனாகிய நந்தகோபனும் அவன் மனைவியான யசோதையும் வளர்க்க வளர்ந்தவன். இந்நூலில் சங்கேதத்தால் பருவம் என்பது பெரும்பிரிவையும், சருக்கம் என்பது சிறுபிரிவையும்குறிக்கும். |