தனால் பெறப்படும். இச்செய்யுள் பிறதிருவவதாரங்களைப்பற்றிக் கூறியதாயினும், எல்லாம் ஸ்ரீ மகாவிஷ்ணுவினது மூர்த்தியேயாதலால், ஏற்புடைக்கடவுள் வாழ்த்து என்னத் தட்டில்லை. மும்மைநெடும்பிறவி - நரநாராயணரும், இராமலக்குமணரும், கிருஷ்ண அருச்சுனரும்; இதனைமேல் வீட்டுமபருவத்தில் கீதையில் கண்ணன் அருச்சுனனைநோக்கி 'உன்னை யான் பிரிவதில்லை யொரு முறைபிரிந்து மேல் நாள், நன்னிலா எறிக்கும் பூணாய் நரனு நாரணனுமானோம், பின்னொரு பிறப்பின் யாமே இராமலக்குமப்பேர் பெற்றோம், இந்நெடும்பிறப்பில் நீயும் யானுமா யீண்டு நின்றோம்" என்பதனால் உணர்க. நாராயணனும் இராமனும் கண்ணனென்றும், நரனும் இலக்குமணனும் அருச்சுனனென்றும் அறிக. இதனால், அருச்சுனன் திருமாலினது அவதாரமென விளங்கும். இனி, இம்மூன்று பிறவியினுள் இராமலக்குமணரை நீக்கி, இந்திரோபேந்திரரைக்கூட்டி இந்திரன் - அருச்சுனனும், உபேந்திரன் - கண்ணனுமென உரைப்பாருமுளர்; அது நூல்வழக்கோடு பொருந்தாது. (ஒருவருக்கொருவர் யோகக்ஷேம சமாசாரங்களைக்) கேட்பதுபற்றி, கேண்மை யென்று நண்பிற்குப் பெயர். கார் படைத்த, படைத்த - உவமவுருபாகவுமாம். கைகள் படைத்ததற்குப் பயன் எம்பெருமானைத் தொழுதலேயாம் என்ற சிறப்புப்பொருள் விளங்குதற்கு, 'கைதொழுவார்' என்றார். தொழுவார் என எதிர்காலத்தாற் கூறியதற்கு ஏற்ப, 'பிறவாழிக்கரை காண்பார்' எனக் கூறவேண்டியதை அங்ஙனங் கூறாமல் கண்டாரென இறந்தகாலத்தாற் கூறியது தெளிவும் விரைவும் பற்றி வந்த காலவழுவமைதி. "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி சேராதார்" என்றபடியே எம்பெருமானைத் தொழுபவர்க்குப் பிறவியறுதலும் தொழாதவர்க்குப் பிறவியறாமையுமாகிய இரண்டும் நியமமாதலால், 'தொழுவார் பிறவாழிக் கரைகண்டாரே' எனக் கூறினார். கடவுளைத் தொழுதமாத்திரத்தில் பிறவித்துயரம் தவறாமல் அழிந்தேவிடுமென்பார், 'பிறவாழிக்கரை கண்டாரே' என்றார். பிறவாழிக்கரைகண்டாரே என்றதனால் பிறப்பற்றுக் கருமசரீர மொழிந்து திவ்வியசரீரம்பெற்று மீளாதமுத்தியுலகஞ் சேர்ந்து நிரதிசய இன்பமடைந்து அங்கு என்றும் ஒருபடிப்பட வாழ்வரென்பதாம். பிற-பிறப்பு; முதனிலைத்தொழிற்பெயர். ஆழ்ந்திருப்பது - ஆழி எனக் கடலுக்குக் காரணப்பெயர், இ - கருத்தாப்பொருள்விகுதி; இனி (பிரளயகாலத்தில் உலகங்களை) அழிப்பதென்றும், வட்டவடிவாகவுள்ளதென்றும் பொருள் கொள்ளலாம். காரணகாரியத்தொடர்ச்சியாய்ப் பிறப்பு மேல்மேல் வருதலால், கடலெனப்பட்டது. பிறப்பாகிய கடலென்றதற்கேற்ப, 'முத்தியாகிய கரை' என்னாதது - ஏகதேசவுருவகவணி. பிறப்பையொழித்து முத்தியைப்பெற வேண்டுதலால், அது அக்கடலைக்கடந்து அடையும் அக்கரையாயிற்று. இனி, "அறவாழியந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லால், பிறவாழி நீந்தலரிது" என்ற திருக்குறளில், பிறவாழி என்பதற்கு - 'அதனிற் பிறவாகிய கடல்கள்' என்று உரைத்துள்ளதனால், அங்ஙனமே இங்கும் பிற ஆழி என்பதற்கு - எம்பெருமானையொழிந்த விஷயாந்தரங்களாகிய கடல்களென்றும் பொருள் கொள்ளலாம். |