பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 81

                             சென்றுமாள்வேம்,
கயிரவமுந்தாமரையுங் கமழ்பழனக்குரு நாட்டிற்கலந்துவாழ,
வுயிரனையாய் சந்துபடவுரைத்தருளென்றானறத்தினுருவம்
                                 போல்வான்.

     (இ - ள்.) 'உயிர் அனையாய் -(எங்கட்கு) உயிரை ஒத்தவனே! - வயிரம்
எனும் கடுநெருப்பை - பகைமையாகிய கொடியதீயை, மிக மூட்டிவளர்க்கின் -
மிகுதியாக மூளச்செய்து விருத்திபண்ணினால், உயர் வரை காடு என்ன - உயர
வளர்ந்த மூங்கிற்காடு (தானே அழிதல்) போல, செயிர் அமரில் - உக்கிரமான
யுத்தத்தில், வெகுளி பொர - கோபத்தோடு போர்செய்தலால், சேர - ஒருசேர,
இருதிறத்தேமும் - (துரியோதனாதியரும் நாங்களுமாகிய) இரண்டு பக்கத்தாரும்,
சென்று மாள்வேம் - போய் அழிவோம்; (அங்ஙனம் அழியாமல்),- கயிரவமும்
தாமரையும் கமழ்பழனம் குருநாட்டில் - ஆம்பல் மலர்களும் தாமரை
மலர்களும் வாசனை வீசுகின்ற கழனிகளையுடைய குருநாட்டிலே, கலந்து வாழ
- (நாங்கள் ஒருவரோடொருவர் பகையின்றிக்) கூடிவாழும்படி, சந்துபட -
சமாதானமுண்டாக, உரைத்தருள் - (நீ அவர்கட்குத் தூது) சொல்லியருள்வாய்,'
என்றான் - என்று (கண்ணனை நோக்கிச்) சொன்னான்:  (யாவனெனில்,)
'அறத்தின் உருவம் போல்வான் - தருமத்தினது வடிவத்தையொத்தவனான
யுதிட்டிரன்; (எ - று.)

    "வயிரமெனுங் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கின்" என்றவிடத்து
உருவகமும், 'வரைக்காடென்னமாள்வேம்' என்றவிடத்து உவமையும் உள்ளன.
மூங்கிற் கூட்டம் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பற்றி எல்லாம் அழிதற்கு
உவமை. வீரரின் தன்மை - வைரம்.  அது - வயிரம் என முதற்
போலிபெற்றது; கயிரவம் என்பதும் இவ்வாறே; சேர்ந்தாரைக்கொல்லுதலால்,
வைரம் நெருப்பாக உருவகப்படுத்தப்பட்டது; "சினமென்னுஞ்
சேர்ந்தாரைக்கொல்லி யினமென்னும், ஏமப் புணையைச் சுடும்" என்றார்
திருவள்ளுவரும்.  மூட்டி, மூள் என்பதன் பிறவினையான மூட்டு - பகுதி.
வரையென்னும் கணுவின்பெயர், அதனையுடைய மூங்கிலுக்குச்
சினையாகுபெயர்.  இருதிறத்தேம் - படர்க்கையை உளப்படுத்திய
தன்மைப்பன்மை.  பகலிலே சூரியனைக்கண்டு மலரத்தக்க தாமரையும்,
இரவிலே சந்திரனைக்கண்டு மலரத்தக்க ஆம்பலும் ஒருங்கு கூடியுள்ள
கழனிகளையுடையதென நாட்டை வருணித்ததனால், ஒன்றுக்கு ஒன்று
மாறுபாடுள்ள அசேதநங்களும் ஒற்றுமைப்பட்டு வாழுமிடத்து, பகுத்தறிவுடைய
மனிதருள்ளுஞ் சிறந்த அரசராகிய நாங்கள் கூடி வாழாதிருப்பது தகுதியோ?
எனக் குறிப்பித்தபடி.

    பாண்டவர்க்குக் கண்ணன் உயிரோடொத்த நண்ப னாகுதலாலும்,
உடம்பினுள் உயிர்போல உயிர்க்குள் உயிராய்ப் பரமாத்மா ஜீவாத்மாவினிடத்து
அந்தர்யாமியாய்த் தங்குதலாலும், 'உயிரனையாய்' என்றது ஏற்கும்.
அறத்தினுருவம் போல்வான் - நூல்களிற்கூறப்பட்ட தருமங்களெல்லாம்
நிறைந்தவனென்றபடி.                                        (66)