தனதுகொடுமைக்கு அறிகுறியாகத் துரியோதனன் பாம்பைத் தனது கொடியிற் கொண்டனன்; அது - அவனது நன்றியறிவின்மை, எப்பொழுதும் வக்கிரகதியிற்செல்லுந் தன்மை, நாவிரண்டுடைமை என்பவற்றிற்கும் அறிகுறியாகின்றது. 'அரவுயர்த்தோன்' என்ற விடத்தில் அரா என்ற குறியதன் கீழ் ஆக் குறுகிற்று. பாதி - பகுதி என்பதன் மரூஉ. கீழ்த் தருமன் 'அறமொன்றின்றிப் பெருஞ்சமரம் விளைக்குமது கடனன்று' என்றதைக் கண்ணன் 'ஆங்கவனைக் கொன்று போரில் இருநிலத்தையாள வினித்துணிவதே கடன்' என மறுத்துக் கூறினான். கொலை பொதுப்படக் கொடியதாயினும், சத்தியத்திற்குக் கட்டுப்படாத அவனைக் கொல்வது பாவமாகாது தருமத்தின் பாற்படு மென்றபடி. 'எம்பிரான்' என்பதில் - எம் என்ற பன்மை - எல்லா வுயிர்களையும் உளப்படுத்தியது, 'இனி' என்ற இடைச்சொல் - மூன்றாமடியில் நிகழ்காலமும், நான்காமடியில் எதிர்காலமும் காட்டிற்று. (67) 8.-'பலரைக் கொல்லுமாறு போர்செய்வதுதகுதியன்று' என்று தருமன் கூறுதல். குரவரையுங் கிளைஞரையுங் குலத்துரியதுணைவரையுங் கொன்று போர்வென்று, அரவநெடுங்கடலாடையவனி யெலாந்தனியாளுமரசுதன்னிற், கரவுறையுமனத்தாதைமுனிக் குரைத்தமொழிப்படியேகானந்தோறும், இரவுபகற்பலமூலசாக நுகர்ந்துயிர்வாழ்தலினிதுநன்றே. |
இதுவும், அடுத்த கவியும் - ஒருதொடர். (இ -ள்.) குரவரையும் - பெரியோர்களையும், கிளைஞரையும் - உறவினரையும், குலத்து உரிய துணைவரையும் - ஒரு குலத்திலே பிறந்த (அன்பு செய்தற்கு) உரிய தம்பிமார்களையும், போர் - யுத்தத்திலே, கொன்று - வென்று சயித்து, அரவம் நெடுங் கடல் ஆடை அவனி எலாம் - ஆரவாரத்தையுடைய பெரியகடலை ஆடையாகவுடைய பூமி முழுவதையும், தனி ஆளும் - (மற்றொருவருமின்றித்) தனியே அரசாளுகின்ற, அரசு தன்னின் - அரசாட்சியைக் காட்டிலும்,- கரவு உறையும் மனம் தாதை - வஞ்சனை பொருந்திய மனத்தையுடைய பெரியதந்தையான திருதராட்டிரன், முனிக்கு உரைத்த - சஞ்சய முனிவனிடத்துச் சொல்லியனுப்பிய, மொழி படியே - சொல்லின்படியே, கானம் தோறும் - காடுகள்தோறும், (சென்று), இரவு பகல் - இராத்திரியிலும் பகலிலும், பலம் மூலம் சாகம் நுகர்ந்து - பழங்களையும் கிழங்குகளையும் இலைகளையும் உண்டு, உயிர் வாழ்தல் - பிழைத்திருத்தல், இனிது நன்றே - மிகவும் நல்லதேயாம்; (எ - று.) - அரசு தன்னின், உயிர்வாழ்தல், இனிது நன்று என்க. குரவர்என்றது - (பெரியபாட்டனாராகிய) பீஷ்மர், (முதலாசிரியராகிய) கிருபர், (இரண்டாமாசிரியராகிய) துரோணர், (அவரதுமகனான) அசுவத்தாமா, (சிற்றப்பனாகிய) விதுரன் முதலியோரை. குரவர் - குரு என்பதன் பன்மையான குரவர் என்னும் வடசொல்லின் திரிபு. கிளைஞர் என்றது சகுனி முதலியோரை, கிளைஞர் என்ற சொல்லில், நண்பரும் அடங்குவர். கிளைஞர் - மரத்துக்குக் கிளைபோல |