மேல் உட்காரென்று சொல்லியும்பங்கப்படுத்திய பொழுது திரௌபதி 'அத்தொடை வழியாகத் துரியோதனனுக்கு உயிர் நீங்குக' என்று சபித்து, 'துரியோதனாதியர் நூற்றுவரையும் கொன்று வெற்றிமுரசறையும் பொழுதே விரித்த கூந்தலை யான் எடுத்து முடிப்பேன்' என்று பிரதிஜ்ஞைசெய்ய, அப்பொழுது 'துரியோதனாதியர் நூற்றுவரையும் நானே கொல்வேன்' என்றும், 'துச்சாதனனைக் கொன்று அவனுடம்பி னிரத்தத்தைக் குடிப்பதன்முன் கையினால் நீரெடுத்துக் குடிப்பதில்லை' என்றும், 'எனது கதாயுதத்தால் நீரையடித்து அங்குத் தெறிக்குந் துளிகளையே உண்டு உயிர்வாழ்வேன்' என்றும் வீமனும், 'இங்ஙனம் துரியோதனன் துஷ்டகாரியம் செய்தற்குப் பெருந்துணையாய் நின்ற கர்ணனைப்போரிற் கொல்வேன்' என்று அருச்சுனனும், சகுனியின் தந்தையைத் தான் கொல்வதாக நகுலனும், சகுனியைக் கொல்வதாகச் சகதேவனும் சபதஞ் செய்ததைக் கீழ்ச் சூதுபோர்ச்சருக்கத்திற் காண்க. போரில்லாவிடின் இச்சபதமொன்றும் நிறைவேறா தாதலால், 'புகன்றபெரு வஞ்சினமும் பொய்த்திடாதோ' எனப்பட்டது. கொடியபகைவரைக் கொல்லுதற்குக் கூசுதலும், இராச்சியத்தைப்பெற முயலாமையும், சபதந் தவறுதலும் (அரசர்க்குச் சிறிதுந் தருமமல்ல வாதலால்) 'நீதியோ' என்றான். லோகாபவாதத்திற்குப் பயப்படுவது எல்லாவற்றினும் முக்கியமாதலால், பூதலத்தோரேசாரோ என அதனை முதலிற் கூறினன்.
கோது - மனமொழி மெய்களின்குற்றங்களாகிய தீயசிந்தை, தீயசொல், தீயசெயல் என்பன. மாயையையுடையவன், மாயன்; மாயையாவது - செய்தற்கு அரியன செய்யுந் திறம்; பிரபஞ்சகாரணமான மூலப்பிரகிருதியுமாம்; ஆச்சரியகரமான குணங்களும் செயல்களு மென்னலுமாம். இனி, மாயைபோலக் கருநிறமுடையானென்றும் கொள்வர். ஏசாரோ - தவறாமல் ஏசுவர்; இரண்டு எதிர்மறை - உடன்பாட்டோடு தேற்றமும் உணர்த்திற்று: பொய்த்திடாதோ என்பதிலும் இவ்வாறே; பொய்க்கவே பொய்க்குமென்க. அமர் - ஸமரமென்ற வடசொல்லின் விகாரம். நிகழ்தல் - ஒளி செய்தல். (69) 10.-இதுவும், மேற்கவியும் - கண்ணனுக்குத் தருமன் தூது பேசும் விதங் கூறுதல்.
நீதூதுநடந்தருளி யெமதுநினைவவர்க்குரைத்தானினைவின்வண்ணந் தாதூதியளிமுரலுந் தண்பதியுந் தாயமுந்தான் றாரானாகின் மீதூதுவளைக்குலமும் வலம்புரியுமிகமுழங்கவெய்யகாலன் மாதூதர்மனங்களிக்கப்பொருதெனினும் பெறுவனிது வசையுமன்றே. |
இதுமுதல் மூன்று கவிகள் - ஒரு தொடர். (இ - ள்.) நீ -, தூது நடந்தருளி - (எங்களுக்காகத் துரியோதனா தியரிடம்) அருளுடன் தூது சென்று, எமது நினைவு அவர்க்கு உரைத்தால் - எங்களுடைய எண்ணத்தை அவர்கட்குச் சொன்னால், நினைவின் வண்ணம் - (நமது) எண்ணப்படி, தாது ஊதி அளிமுரலும் தண் பதியும் - பூ விதழ்களை (வாயினால்) ஊதி வண்டுகள் |