பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 95

17. அதற்குத் தருமன் சமாதானஞ்சொல்லுதல்.

பரிவுடன்மற் றிவைகூறும் பவனகுமாரனைமலர்க்கை பணித்து
                                      நோக்கிக்,
குருகுலத்தோர் போரேறே குற்றமது பார்க்குங்காற்
                                   சுற்றமில்லை,
யொருகுலத்திற் பிறந்தார்களுடன்வாழும்வாழ்வினைப்
                              போலுறுதியுண்டோ,
விருவருக்கும் வசையன்றோவிருநிலங்காரணமாகவெதிர்ப்
                                    பதென்றான்.

     (இ - ள்.) பரிவுடன் -வருத்தத்துடனே, இவை கூறும் -
இவ்வார்த்தைகளைச் சொல்லுகிற, பவன குமாரனை - வாயுபுத்திரனான
வீமனை, (தருமன்), - மலர் கை பணித்து - தாமரைமலர்போன்ற தனது
கையால் அமர்த்தி அடக்கி, நோக்கி - (அவனைப்) பார்த்து,- 'குரு குலத்தோர்
போர் ஏறே - குருவென்னும் அரசனது குலத்திற் பிறந்த அரசர்களுள்
போரிற்சிறந்த ஆண்சிங்கம் போன்றவனே! குற்றமது பார்க்கும் கால் சுற்றம்
இல்லை - குற்றத்தையே ஆராய்ந்தால் (எவர்க்கும்) உறவினராவார் இல்லை;
ஒருகுலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ
- ஒருகுடும்பத்திலே பிறந்தவர்கள் தமக்குள் மாறுபாடின்றி ஒத்துவாழும்
இல்வாழ்க்கையைப்போல நன்மை தருவது (வேறு) உண்டோ? இல்லையன்றோ];
இரு நிலம் காரணம் ஆக எதிர்ப்பது - பெரிய இராச்சியங் காரணமாக
எதிர்த்துப்போர் செய்வது, இருவருக்கும் வசை அன்றோ - இருதிறத்தார்க்கும்
பழிப்பாகாதோ?' என்றான் - என்று சொன்னான்; (எ - று.) - மற்று - அசை;
இந்த அவசியமில்லாத பதத்தால், 'மற்று இவை' என்பதற்கு - இன்னும்
இவைபோன்றவற்றை யென்று பொருள் கொள்ளலாம்.

     சினங்கொண்ட வீமனைமேன்மைப்படுத்தி அவனைத் தன் கருத்துக்கு
உட்படுத்துமாறு தருமன், 'குருகுலத்தோர்போரேறே' என்று விளித்தான்.
பவநகுமாரன் என்னும் ஆறாம்வேற்றுமைத்தொகை - வடநூல்முடிபு.  பவநன்
என்ற வடசொல்லுக்கு - சஞ்சரிப்பவனென்பது காரணப்பொருள்.
குருகுலத்தோர் ஏறு - விலங்குகளுட் சிறப்புடையதாகிற சிங்கம்போலக்
குருகுலத்தாருட் சிறந்தவனென்க; இனி, கௌரவரெனப்படுகிற
துரியோதனாதியராகிய யானைகளை யொழிப்பதற்குச் சிங்கம்
போன்றவனென்றுமாம்.  ஏறு போல்பவனை ஏறு என்றது, உபசாரவழக்கு, ஏறு
- சில விலங்குகளின் ஆண்மைப் பெயர்.  'போரேறு' என்றது, பல
பராக்கிரமங்களை விளக்கக் கூறியது.  சிறந்த வீரனுக்குச் சிங்கம் - நடை
வலிமை நோக்குத் தைரிய காம்பீரியங்களால் உவமையாம்.  இன்னமலரென்று
குறியாது 'மலர்' என்று மாத்திரம் கூறினால், அது - "பூவெனப்படுவது
பொறிவாழ் பூவே" என்றபடி, எல்லா மலர்களுள்ளுஞ் சிறந்த தாமரையைக்
குறிக்கும்.  கைக்குத் தாமரைமலர் உவமை - செம்மை மென்மை அழகுகளில்.
குற்றமது என்றவிடத்து, 'அது' என்பது - பகுதிப் பொருள் விகுதி.  கால் -
காலமென்பதன் விகாரம்.  அன்றோ - தேற்றம்.  பரிவுடன் -
(தமையனாரிடத்து) அன்புடனே அல்லது இரக்கத்துடனே யென்றுங்
கொள்ளலாம்.