பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 99

திருந்தும், இவள் விரித்த குழல் கண்டும் -இத்திரௌபதி விரித்துள்ள
கூந்தலைப் பார்த்திருந்தும், இமைப் பொழுதில் நேரார் தம்மை கொலைகண்டு
மகிழாமல் - ஒரு நொடிப் பொழுதினுள்ளே பகைவர்களை (நாங்கள்) கொலை
செய்தலைப் பார்த்து உவப்படையாமல், அவன் குடைக்கீழ் உயிர் வாழ
குறிக்கின்றாயே - அத்துரியோதனனது ஆளுகையின் கீழ் (அடங்கியிருந்து
அரசுபெற்று) உயிரோடு கூடிவாழ எண்ணுகின்றாயே! (எ - று.)- ஏகாரம் -
அவ்வெண்ணத்தின் இழிவை நன்கு விளக்கும்.

     'இவள் விரித்த குழல் கண்டும்'என்றதனால், துரியோதனாதியரைக்
கொல்லுதற்குக் காரணமும், மற்றையவற்றால் அவர்களைக் கொல்லுதற்கு ஏற்ற
ஆற்றலும் கூறியவாறாம்.  இங்கு 'உயிர்வாழக் குறிக்கின்றாயே' என்றதனால்,
இங்ஙனம் மானங்கெட்டு வாழ்தலினும் இறத்தலே தகுதி யென்பது போதரும்.
எமக்கு ஆக - எமக்கு (வெற்றி) உண்டாக என்றலுமாம்.

     வீமன் கையிலுள்ள கதாயுதம்பகைவர்களைத் தவறாது கொல்லும்
இயல்பினதாய்ச் சத்ருகாதிநி யென்று பெயர் பெறும்; அதனது அவ்வகையான
சிறப்புத் தோன்ற, 'மறத்தண்டு' என்றான்.  வீமனுக்கு இக்கதை,
அசுரத்தச்சனான மயனால் அளிக்கப்பட்டது.  அருச்சுனனுக்குக் காண்டீவ
வில், காண்டவ தகன காலத்திலே அக்கினி பகவான் கொடுத்தது.  மகவான்
என்ற சொல்லுக்கு - யாகங்களை யுடையவனென்று காரணப்பொருள்; மகம் -
யாகம்; வான் - ஆண்பாற் பெயர்விகுதி.  நூறு அசுவமேதயாகங்களைச்
செய்து தேவராசபதவி பெறுதலால், இந்திரனுக்கு இப்பெயர்: யாகத்திற்
கொண்டாடப்படுந் தேவர்கள் பலர்க்குந் தலைவனாதல் பற்றியுமாம்.  இருவர் -
தொகைக்குறிப்பு: இரட்டைய ரென்றவாறுமாம்.  இமைப்பொழுது - இயற்கையில்
ஒருகால் கண்ணிமைகளை மூடித்திறத்தற்கு வேண்டும் பொழுது.  நேரார்
என்பதற்கு - உடன்பட்டு இணங்கி வாழாதவரென்று பொருள்; எனவே,
பகைவராம்; எதிர்மறைப் பலர்பால்வினையாலணையும்பெயர்.  உம்மைகள் -
உயர்வுசிறப்பு.                                              (80)

21.-கண்ணன் வீமனைச் சமாதானப் படுத்துதல்.

வெம்புயவீமனும் வெகுண்டு மீண்டுமிவை யெடுத்துரைப்ப
                                      மேகமேனிப்,
பைம்பொனெடுந் தனித்திகிரிப் பரந்தாமன்கருணையுடன்
                                     பரிந்துநோக்கி,
யம்புவியின் முன்பிறந்தோரரசுநெறிமுறையுரைத்தா லதுகேளாமற்,
றம்பியருமறுப்பரோதலைவவினிக்கடுங்கோபந் தணிகவென்றான்.

     (இ - ள்.) வெம்புயம் வீமனும் -(பகைவர்க்குப்) பயங்கரமான
தோள்களையுடைய வீமசேனனும், வெகுண்டு - கோபங்கொண்டு, இவை
மீண்டும் எடுத்து உரைப்ப - இவ்வார்த்தைகளை மறுபடியும் எடுத்துச்
சொல்ல,- (அப்பொழுது),- மேகம் மேனி - மேகம்போற்கரிய திருமேனியையும்,
பைம்பொன் நெடுந் தனிதிகிரி - பசும் பொன்மயமான பெரிய ஒப்பற்ற
சக்கராயுதத்தையுமுடைய, பரந்தாமன் -