பக்கம் எண் :

1

ம கா பா ர த ம்
பாடிய
வில்லிபுத்தூரார் வரலாறு.

    வில்லிபுத்தூராரென்பவர், தமிழில் மகாபாரதம் பாடிய ஒரு மகாகவி; இவர்
பிராமணசாதியிற் பிறந்தவர். இவருடைய மதம் திருமண்காப்புத் தரிக்கும்
வைஷ்ணவ மென்பது. இப்பாரதத்தின் முதலிலும் இந்நூற் சருக்கங்களின்
தொடக்கம்பலவற்றிலும் இவர் ஸ்ரீமகாவிஷ்ணுவின் விஷயமாகவே பலவாறு கடவுள்
வாழ்த்துக் கூறியுள்ளதனாலும், "எங்கள் மாதவன்" என்று நூலைத் தொடங்கி
யிருப்பதனாலும், வில்லிபுத்தூராழ்வாரெனத் திருநாமமுடைமையாலும், ஒன்பதாம்
போர்ச்சருக்கத்துக் காப்புச்செய்யுளில் "ஓராறுபேதசமயங்களுக்கு முருவாகிநின்ற
வொருவ, னீராறுநாம முரைசெய்து மண்கொடிடுவார்கள் காணுமிமையோர்"
எனத்துவாதசோர்த்துவ புண்டரத்தைச் சிறப்பித்துக் கூறியதனாலும்,
பதினைந்தாம்போர்ச்சருக்கத்துக் காப்பில் "கொத்தவிழ்த்த சோலைமன்னு
குருகையாதிநெஞ்சிலே, வைத்த முத்திநாதன்" என நம்மாழ்வாரையும்,
பத்தாம்போர்சருக்கத்துக்காப்பில் "கலியனெங்கள் மங்கையாதி கண்டுகொண்ட
நாமமே" எனத்திருமங்கையாழ்வாரையும் கூறியுள்ளதனாலும் தெளிவாகும்.

     நடுநாடென்று சொல்லப்படுகிற திருமுனைப்பாடி நாட்டில் சனியூரிலே
பிராமணசாதியிலே வைஷ்ணவமதத்தில் வீரராகவாசார்ய ரென்பவர்க்குத்
திருக்குமாரராய்த் திருவவதரித்து *வில்லிபுத்தூராழ்வாரென்று இயற்பெயர்பூண்ட
இவர் பாரதம்பாடிய காரணம்:- இவர் இளமையிலே நல்லாசிரியரையடுத்துக்
கல்விகற்று, இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழிலும் மிகவல்லவராய்
வடமொழியிலும் மிக்கதேர்ச்சிபெற்று, ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் என்னும்
நால்வகைக் கவிகளையும் மிகஎளிதில் அமிழ்தினும் இனியன வாகப்பாடவல்லவராய்,
சேர சோழ பாண்டியரென்னுந் தமிழ்நாட்டு மூவேந்தர்களாலும் மிக்க சிறப்புடன்
விரும்பியழைக்கப்பட்டு ஆங்காங்குச்சென்று தமது கல்வித்திறத்தைப் பலவகையாலுங்
காட்டி அவர்களைக் களிப்பித்து. அவர்கள் அன்போடு அபிமானித்து
மிகுதியாகவழங்கிய சிறந்த பல பெரும்பரிசுகளைப்பெற்று, பற்பல கவிகள் பாடித்
திருமாலை இரவும் பகலும் எப்பொழுதுந் துதித்துக்கொண்டு, தமிழ்நாடு முழுவதிலும்
தமது கல்விப்பெரும்புகழைப் பரவச்செய்து வந்தார். அங்ஙனமே வருகையில்,
முற்கூரிய திருமுனைப்பாடிநாட்டிலே வக்கபாகை யென்னும் இராசதானியில்
வீற்றிருந்து செங்கோல் செலுத்திய கொங்கர்குலத்துத்தோன்றிய
வரபதியாட்கொண்டா


    *வில்லிபுத்தூராழ்வாரென்பது - ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்த
பெரியாழ்வார்க்கு வழங்கும்: அதனையே இவர்க்கு இட்டனரென்க. இச்சொல்
வில்லிபுத்தூராரென்றும் வழங்கப்பெறும்,