பக்கம் எண் :

நான்காம் போர்ச்சருக்கம்127

நீர்வெள்ளத்தையுடைய, கரு கடல் போல்-கரியசமுத்திரம்போல, அதிராநின்ற -
ஆரவாரிக்கிற, அகவத்தில் - போர்க்களத்திலே, மலை கால் பெற்று வருவது போல்
வரு - ஒருமலை (நான்கு) கால்களையுடையதாய் வருவதுபோல வருகிற, திண்-
வலிய, பனை கை மா மிசையான் - பனைமரம்போன்ற துதிக்கையையுடைய
யானையின் மேலேறியவனாய்,- சிலை கால் வளைத்து-வில்லின்கோடிகளை
வளைத்து, தீ வாய் வெம் சரம்கொண்டு-நெருப்பையுமிழ்கிற நுனியையுடைய
கொடிய(தன்) அம்புகளால், அடையார்சிரம் கொண்டான் - (பல) பகைவர்களின்
தலைகளைஅறுத்திட்டான். (எ-று)

     இவன் ஏறிவரும் பட்டத்துயானைக்குச் சுப்பிரதீகமென்று பெயர்; "இதற்கு
நாம்முரைசெயின் நிலையுடைய சுப்ரதீகம்" என்பர், மேல்பன்னிரண்டாம்
போர்ச்சருக்கத்தில். மலை கால் பெற்று வருவது - இல்பொருளுவமை.
சிலைகால்வளைத்தல் - வில்லின் தண்டத்தை வளையச்செய்தல். அடையார்-
(தன்னைச்) சேராதவர். யமனுக்குத் தான் அஞ்சாமல் யமனைத் தான்
அஞ்சுவிப்பவனென்பது, நான்காம் அடியின் கருத்து.             (170)

32.-பகதத்தனால் தம்சேனைக்குநேர்ந்த தளர்வைக் கடோற்கசன்
பார்த்தல்,

தாரா ரோடைத் திலகநுதற் சயிலம் பதினா யிரஞ்சூழ
வாரா நின்ற மதகயத்தின் வன்போர் வலியு மனவலியுஞ்
சேரார் வணங்கும் பகதத்தன் றிண்டோள் வலியுஞ்
                                  சிலைவலியும்
பாரா நின்ற கடோற்கசன்றன் படையின் றளர்வும் பார்த்தானே.

     (இ - ள்.) தார் ஆர் - கிண்கிணிமாலைகள் நிறைந்த, ஓடை திலகம் நுதல்-
பட்டத்தையும் சிந்தூரத்திலகத்தையும் அணிந்த நெற்றியையுடைய, சயிலம்
பதினாயிரம் - மலைபோன்ற பதினாயிரம் யானைகள், சூழ - (தன்னைச்) சூழ்ந்து
வர,வாராநின்ற-(இடையிலே) வருகிற, மதம் கயத்தின் - (சுப்பிரதீக மென்னும்
அந்த)மதயானையினது, வல் போர் வலிஉம் - வலிய போர் வல்லமையையும்,
மனம்வலிஉம் - மனத்திலுள்ள போர்க்களிப்பையும், சேரார் வணங்கும் பகதத்தன்
-பகைவர்கள் வணங்கத்தக்க பகதத்தனது, திண் தோள் வலிஉம் - உறுதியான
தோள்களின் வலிமையையும், சிலை வலி உம்-வில்லின் வலிமையையும்,
பாராநின்ற-பார்த்துநின்ற, கடோற்கசன்-,தன் படையின் தளர்வுஉம்-
(அவனாலுண்டான)தன்பக்கத்துச்சேனையின் தளர்ச்சியையும், பார்த்தான்-;
(எ - று.)

     இனி, தார்-அலங்காரத்துக்காக அணியும் பூமாலையுமாம். ஓடை -
நெற்றிப்பட்டம்; இது - பொன்னினால் அமைவது: ஆடையாலமையும் முகபடாம்
சூழி யெனப்படும்: இவ் வேறுபாட்டை "விழுச்சூழிய விளங்கோடைய" என்னும்
மதுரைக்காஞ்சியின் உரைநோக்கி அறிக. சயிலம்=சைலம்: உவமையாகுபெயர்.
மனவலி-பகதத்தனது மனோபலமுமாம்.                             (171)