வல்ல சிறந்த ஆசிரியனும் ஆவன்; ஆதலால், திருமாலையொழிய வேறு சிறந்த கடவுள் இல்லை என்பது கருத்து. கருநிறத்திற்கும், காண்பவர் மனத்துயரந் தீர்க்கவல்ல குளிர்ச்சிக்கும், கைம்மாறு கருதாது கருணைமழைசொரிதற்கும், எம்பெருமானுக்கு நீலமேகம் உவமை. விரதங்களால் உணவு சுருக்குதல், வெயில் மழை பனிகளில் வருந்துதல் முதலிய சிரமம் சிறிதும் இல்லாமல் முத்தியைப் பெறும்உபாயமாதலால், பகவானைத் தியானித்தல் அருமாதவமாயிற்று. "ஞானமனுட்டானமிவை நன்றாகவே யுடைய, னான குருவை யடைந்தக்கால்- மாநிலத்தீர் தேனார்கமலத் திருமாமகள் கொழுநன், றானே வைகுந்தந் தரும்" என்றபடி நல்லாசிரியரை யடுத்து அவர்கள்முகமாகவே முத்திபெறவேண்டுதலால், 'முத்தி தருகைக்கு மவனே குரு' என்றார். தரு-வடசொல். கற்பக மலர்களின்மாலை, இந்திரன்முதலிய தேவர்களால் திருமாலினது திருவடிகளில் கொணர்ந்து சமர்ப்பிக்கப்பட்டவை. தேவர்கள்மாலையில் வண்டுமொய்த்தல் இல்லை யாயினும் சிறந்த அருளுடைமை தோன்ற, வண்டேறுதுழாய்' எனப்பட்டது. துளசிமாலை- திருமாலுக்கு உரியது. முன் இரண்டடியால், திருமாலினது அடியார்களின் மகிமையை எடுத்து நன்குவிளக்கி, அது மூலமாகப் பின் இரண்டடிகளில் அத்திருமாலின் ஒப்புயர்வற்ற மேன்மையை விளக்கினார். தரு-மலருக்கு முதலாகுபெயர். இதுமுதற் பன்னிரண்டு கவிகள்-பெரும்பாலும் முதல் நான்கு சீரும் மாங்காய்ச்சீர்களும், ஈற்றுச்சீ ரொன்று மாங்கனிச்சீருமாகிய நெடிலடி நான்கு கொண்டகலிநிலைத்துறைகள். (182) 2.- வாச்சியப் பேரொலியோடு தருமன்சேனைவெள்ளம் புறப்படுதல். வரசங்சமுந்தாரையுஞ்சின்னமும்பொன்மணிக்காளமு முரசங்களுந்துந்துபியுமெங்குமெழவிம்மமுழவிம்மவே கரைசிந்துதிரைசிந்துநுரைசிந்துவிரைசிந்துகணமென்னவே யரசன்பெருஞ்சேனைவெள்ளம்புறப்பட்டதணியாகவே |
(இ-ள்.) வர சங்கம்உம்-சிறந்த சங்குகளும், தாரைஉம்-தாரையென்னும் ஊதுகருவியும், சின்னம்உம்-சின்னமென்னும் ஊதுகருவியும், பொன் மணி காளம்உம்-பொன்னினாலும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட எக்காளமென்னும் ஊதுகருவியும், முரசங்கள்உம்-பேரிகைகளும், துந்துபிஉம்- துந்துபியென்னும் வாத்தியமும், எங்குஉம்-எவ்விடத்தும், எழ-ஓசையெழும்படி, விம்ம-ஒலிக்கவும், முழ-மத்தளங்கள் விம்ம-முழங்கவும்,-கரை சிந்து-கரையை மோதுகிற, திரை - அலைகளை, சிந்து - வீசுகிற, நுரை சிந்து-நுரை சிந்தப்பெற்ற, விரை சிந்து கணம் என்ன - விரைந்து வரும்படியான கடல்களின் கூட்டம்போல, அரசன் பெருசேனை வெள்ளம் - தருமராசனது பெரிய சேனைகளின் கூட்டம், அணி ஆக புறப்பட்டது - வரிசையாகப் (போருக்குப்) புறப்பட்டது; (எ-று.) |