(இ - ள்.) கடவுள் -தெய்வத்தன்மையுடைய, கங்கை - கங்கா நதியினது, நீர் - சலத்தை, முடித்தான் - சடையில் தரித்த சிவபிரானது, இரவு - இரத்தல் தொழிலை, ஒழித்த - நீக்கியருளின, நீ-, அறிய - உணர, போர் முடித்தான் - யுத்தத்தை நிறைவேற்றினான்; அமர் பொருது - யுத்தத்தைச் செய்து, புலம்பு உறு சொல் பாஞ்சாலி பூ தண்கூந்தல் கார் முடித்தான் - அழுதல் மிக்க சொற்களையுடைய திரௌபதியினது அழகிய குளிர்ந்த மேகம்போற் கரிய கூந்தலை முடிக்கச்செய்தான்; இளையோர் முன் கழறிய வஞ்சினம் முடித்தான் - தம்பிமார்கள் முன்னே (சபையிலே) உறுதியாகக் கூறின சபதங்களை முடியச் செய்தான்; வசை இன்றி நிலைநின்று ஓங்கும் பேர் முடித்தான் - பழிப்பில்லாமல் என்றும் அழியாது சிறந்து நிலைநிற்கிற கீர்த்தியை முழுவதும் பெற்றான்; இப்படியே யார் முடித்தார் - இங்ஙனம் இவன்போல (முடிக்கவேண்டுவன எல்லாவற்றையும்) முடித்தவர் யார்? நான் இவனுடனே பிறப்பதே - (சுத்த வீரனாகிய) யான் (அங்ஙனம் இல்லாதவனாகிய) இவனுடன் தம்பியாகப் பிறத்தல் தகுதியோ? [அன்றென்றபடி]; (எ - று.) - ஈற்றேகாரம் - வினாவகையால் மிக்க இரக்கத்தைக் காட்டும். இப்பாட்டில், 'முடித்தான்' என வந்தனபலவும் எதிர்மறையிலக்கணையால், ஒன்றையும் முடிக்கவில்லை யென்பதை விளக்கும்; இது - இகழ்ச்சி பற்றிய பிறகுறிப்பின் பாற்படும். புலம்பு - முதனிலைத் தொழிற்பெயர். உறுசொல் - உரிச்சொற்றொடர். பாஞ்சாலி - பாஞ்சாலதேசத்தரசன் மகள்; தத்திதாந்தநாமம். பூ - பூக்களை முடித்தற்கு உரிய என்றுமாம். கூந்தற்கார் - முன்பின்னாகத் தொக்க உவமத்தொகை. கங்காநதிக்குத் தெய்வத்தன்மை - தன்னில் ஒருகால் மூழ்கியவரது அருவினையனைத்தையும் அழித்து உயர்பதமளித்தலும், "சதுர்முகன் கையிற் சதுர்ப்புயன்தாளிற் சங்கரன் சடையினில் தங்கு" தலும். நீர் - நீரமென்னும் வடமொழியின்திரிபென்பர். இரவு - இரத்தல்; தொழிற்பெயர்; இர - பகுதி. பரமசிவன் ஒருகாலத்தில்தன்னைப்போலவே பிரமனும் ஐந்து சிரமுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கிடமாயிருக்கின்ற தெனக்கருதி, அவனது சிரத்தைக் கொய்துவிட, அக்கபாலம் அப்படியே அவன் கையில் ஒட்டிக்கொள்ளுதலும், இதற்கு என் செய்வதென்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும் 'இப்பாவந்தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும்; என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்' என்று உரைக்க, சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக் கொண்டு வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நிறைந்து நீங்காதாக, ஒருநாள் ஸ்ரீ மகாவிஷ்ணுவை அடைந்து ஏற்றபோது அவர் அக்ஷயமென்று பிச்சையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பது 'இரவொழித்த' என்றதன் வரலாறு. உலகத்தில் நடக்குந் தொழில்கள்எல்லாவற்றையுங் காண்பவனாய் நின்ற கடவுளையே சாட்சியாக்கி, 'நீயறிய' என்றது. "வசையொழிய வாழ்வாரே வாழ்வாரிசையொழிய, வாழ்வாரே வாழாதவர்" |