சொல்ல, நீ-, கேண்மோ - கேட்பாயாக; எங்குஉம் ஆய் - எல்லா விடங்களிலும் பொருந்தி, யாஉம் ஆகி - எல்லாப்பொருள்களுமாய், மன்னிய - அழியாதுநிலைபெற்ற, பொருள்உம்-பரம்பொருளும், யான்ஏ- நானே; மறைக்கு எலாம் முடிவுஉம்-வேதங்களுக்கெல்லாம் முடிவான பொருளும், யானே-;உன்னை-, யான்-, பிறிவது இல்லை - (எப்பொழுதும்) விட்டுநீங்குவதில்லை; மேல்நாள் - முற்காலத்தில், ஒருமுறை - ஒருதரம், பிறிந்து - நீங்கி, நரன்உம் நாரணன்உம் ஆனோம் - நரநாராயணராய் அவதரித்தோம்; (எ - று,) முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் விளக்கும்பொருட்டு நரனென்னும் சிஷ்யனும் நாராயணனென்னுங் குருவுமாகப் பதரிகாச்சிரமத்தில் திருமால்தோன்றிச் சிஷ்யனுக்குக் குரு தத்துவப் பொருள்களை உபதேசிப்பதாக வீற்றிருக்கின்றனர்; "நாராயணனாயுலகத்தறநூல், சிங்காமை விரித்தவனெம்பெருமான்" என்பது பெரிய திருமொழி. அவர்கள் தாமே இங்கு முறையே அருச்சுனனுங் கண்ணனுமாக அவதரித்தவர்; இங்கும் அருச்சுனனைச் சிஷ்யனாக்கிக் கண்ணன் குருவாய் நின்று தத்துவம் விளக்கியருளுதல் காண்க; இதுபற்றியே, அருச்சுனனுக்கு, நரனென்று ஒருபெயர். கேண்மோ, மோ - முன்னிலையசை. நாரணன்- நாராயணன் என்பதன் விகாரம்; நார + அயந எனப் பிரியும்; சிருஷ்டிப்பொருள்களுக் கெல்லாம் இருப்பிடமானவ னென்றும், பிரளயப்பெருங்கடலை இருப்பிடமாவுடையவ னென்றும், மற்றும் பலவாறும் பொருளுரைப்பார். "செய்கின்ற கிறியெல்லாம் யானே யென்னும் செய்வானின் றனகளும் யானே யென்னும், செய்துமுன் னிறந்தவும் யானே யென்னுஞ் செய்கைப் பயனுண்பேனும் யானே யென்னும் செய்வார்களைச் செய்வேனும் யானே யென்னும்" என்றும், "உற்றார்க ளெனக்கில்லை யாருமென்னும் உற்றார்க ளெனக்கிங்கெல்லாரு மென்னும், உற்றார்களைச் செய்வேனும் யானே யென்னும் உற்றார்களை யழிப்பேனும் யானேயென்னும்" என்றுந் திருவாய்மொழியிற் கூறியுள்ளவற்றின் கருத்துக்களை இங்கே யுணர்க. கொல்பவனும் கொல்லப்படுபவனும் கொலைத்தொழிலும் கொல்விப்பவனும் எல்லாம் நானே யாதலால், நீ உன்னைக் கொல்பவனாகவும், சுற்றத்தவரைக் கொல்லப்படுபவராகவும் மாறுபாடாக நினைத்துப் பந்து வதத்தைப் பற்றிச் சிறிதுஞ் சிந்திக்கவேண்டா என்று உபதேசித்துக் கண்ணபிரான் அருச்சுனனது மனத்தடுமாற்றத்தை யொழித்தருளுகிறார். ஏகாரங்கள் பிரிநிலையோடு தேற்றம். மறைக்கெலாமுடிவு - வேதாந்த சித்தாந்தம். மறைமுடிவு என்றது, வேதத்தின்பாகங்கள் இரண்டனுள் பகவானைப்பற்றிச் சொல்வதாய்ப் பிரமகாண்டமெனப்படுகிற உபநிஷத்துக்களை. இரண்டாமடியிலுள்ள உம்மைகள் இரண்டனுள், முன்னது - எதிரது தழுவியதும், பின்னது - இறந்ததுதழுவியதுமாம்.(6) 7. | பின்னொருபிறப்பின்யாமேயிராமலக்குமப்பேர்பெற்றோம் இந்நெடும்பிறப்பினீயும்யானுமாயீண்டுநின்றோம் நின்னிடைமயக்குமிந்தநேயமுமொழிகவென்று தன்னிலையவற்குக்காட்டித்தத்துவந்தெளிவித்தானே. |
|