12. | ஈமந்தொ றுஞ்சென்று நடமாடு கழலைய னெதிராய்வருங் காமன்ற னுடன்மேல்வி ழித்திட்ட நுதலிற்க னற்கண்ணெனத் தாமம்பு னைந்தார மணநாறு மார்பத்த டந்தோயவே வீமன்றொ டுத்தானொ ரெதிரம்பு பார்மன்னன் மிடல்சாயவே. |
(இ-ள்.) ஈமம் தொறும் - மயானங்களிலெல்லாம், சென்று-போய், நடம் ஆடு - கூத்தாடுகிற, கழல் - சீர்பாதங்களையுடைய, ஐயன்-தலைவனான சிவபிரான், எதிர் ஆய் வரும் காமன்தன் உடல் மேல் விழித்திட்ட-எதிரியாய் (ப் போருக்கு) வந்த மன்மதனது உடம்பை இலக்காகக் கொண்டு அதன்மேல் விழித்துப்பார்த்த, நுதலில் கனல் கண் என - நெற்றியிலுள்ள நெருப்புக்கண்போல,-தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்பம் தடம் தோய-மாலைகளைத் தரித்து மிகவாசனைவீசுகிற மார்பினிடத்திலே பதியவும், பார் மன்னன் மிடல் சாய-பூமியை ஆளும் அரசனான அத்துரியோதனன் (அதனால்) வலிமைகெடவும், வீமன்-வீமசேனன், ஓர் அம்பு எதிர் தொடுத்தான்-ஒருபாணத்தை எதிரிலே செலுத்தினான். சிவபிரான் வீமனுக்கும், நெற்றிக்கண் அம்புக்கும், மன்மதன் துரியோதனனுக்கும், அழித்தலும் அழிக்கப்படுதலுமாகிய தொழில்பற்றி உவமை. சர்வசங்காரகாலத்தில் எல்லாப்பிராணிகளும் அழியப்பெற்ற உலகமுழுவதும் இடுகாடுஆவதனால், அவ்விடம் முழுவதிலும் அப்பொழுது சிவபிரான் உமாதேவி கண்டுஉள்ளம் மகிழும்படி திருநடனஞ் செய்கின்றன ரென்பது, சைவசம்பிராதாயம். நடம்- வடசொல். ஆரம் மணம் நாறும் என எடுத்து, சந்தனக்குழம்பு கமழப்பெற்ற எனினுமாம். ஒரேதிரம்பு - துரியோதனன் தானாகவந்து விட்ட பல அம்புகளுக்கு மாறாகச்செலுத்தப்பட்ட ஒரு அம்பு. (193) வேறு 13.-வீமன்மீது பூரிசிரவா வந்து பொருதல். ஓரம்பினு ளைந்தேழுல குடையானல மரவே வீரம்புனை வீமன்குனி வில்லோடெதிர் நிற்கப் போரம்பர வுலகாள்பவர் புகழ்பூரிச வாவந் தீரம்புதொடு த்தானொரு தேர்மேலின னிவன்மேல். |
(இ -ள்.) ஏழ் உலகு உடையான்-ஏழுதீவுகளாகவுள்ள பூமி முழுவதையும் தனதாகவுடைய துரியோதனன், ஓர் அம்பின் உளைந்து அலமர - (தனது) ஒரு அம்பினால் வருந்திக்கலங்கும்படி (செய்து), வீரம் புனை வீமன் - வீரத்தன்மையைப்பெற்றுள்ள வீமசேனன். குனி வில்லோடு எதிரி நிற்க - வளைந்தவில்லுடனே எதிரில்நிற்க,-(அப்பொழுது),- அம்பரம் உலகு ஆள்பவர் - ஆகாயத்திலுள்ள சுவர்க்கலோகத்தை அரசாளுகிற (இந்திரன் முதலிய) தேவர்களால், போர் புகழ் - யுத்தத்திற் புகழப்படுகிற, பூரிசவா - பூரிசிரவசு என்னும் அரசன், ஒரு தேர் மேலினன் வந்து - ஒருதேரின்மேல் ஏறினவனாய் வந்து, இவன்மேல் ஈர் அம்பு தொடுத்தான் - இவ்வீமன்மேல் இரண்டு பாணங்களைச் செலுத்தினான்;(எ-று.) |