பக்கம் எண் :

148பாரதம்வீட்டும பருவம்

போது - அப்பொழுது, அனிகத்தோடும் - சேனைகளுடனே, ஒருவா -
(போர்க்களத்தை நீங்கி, அகல் பாசறை புக்கார் - விசாலமான படைவீட்டை
அடைந்தார்கள்; (எ - று,)

     'படை செம்புனல் கடலுண்டது கால்வார்' என்ற பாடத்துக்கு -
ஆயுதங்களாற்கடல்கொள்ளும்படியான [மிக அதிகமான] இரத்தத்தைப்
பெருக்குபவர்களும் என்க.அகல்+பாசறை=அகன்பாசறை; குறில்செறியாலள"
என்னுஞ்சூத்திரத்து 'பிற' என்றமிகையால் அமைக்கப்படும்.        (205)

25-மறுநாள் சூரியோதய வருணனை.

இரவென்றிருள் கெழுநஞ்சினி ளந்திங்களெ யிற்றோ
ராவுண்டது தான்மீளவு மிழ்ந்தென்னவ ருக்க
னுரவுங்குட் திசைநீனிற வுததிக்குளொ ளித்தோன்
விரவுங்குண திசைவேலையின் மிசைவந்துகி ளர்ந்தான்.

     (இ-ள்.) இருள் - இருட்டாகிய, கெழு நஞ்சின் - மிகுந்த விஷத்தையும் இள
திங்கள் - கலைகுறைந்த (பிறைச்) சந்திரனாகிய, எயிறு - கோரப்பல்லையுமுடைய,
இரவு என்ற - இராத்திரியாகிய, ஓர் அரவு - ஒரு கரும்பாம்பினால், தான் உண்டு-
தான் உண்ணப்பட்டு, அது மீள உமிழ்ந்து என்ன-அப்பாம்பினால் மறுபடி
உமிழப்பட்டாற்போல, அருக்கன்-சூரியன், உரவுகுடதிசை நீல் நிறம் உததிக்குள்
ஒளித்தோன் - வலிமையுடைய மேற்குத் திக்கிலுள்ள நீலநிறத்தையுடைய கடலிலே
(முந்தினநாள் மாலைப்பொழுதில்) மறைந்தவன், விரவும் குண திசை வேலையின்
மிசை வந்து கிளர்ந்தான் - பொருந்திய கிழக்குத்திக்கிலுள்ள கடலின் மேலே
(மறுநாளுதயத்தில்) தோன்றி விளங்கினான்; (எ-று.)

     உண்ணப்பட்டாற்போல அஸ்தமித்தவன் உமிழப்பட்டாற்போல
உதித்தனனென்பதாம்: சூரியன் சிலகாலத்தில் இராகுவென்னும்
கரும்பாம்பாலுட்கொள்ளப்படுதலைக் கருதி. இங்ஙனம் கூறினார். உருவகவணியை
அங்கமாகக்கொண்டுவந்த தன்மைத்தற் குறிப்பேற்றவணி. என்றிருள் - விகாரம்.
'உரவுக்குடதிசை' என்பது-உரவுங்குடதிசை யென ஓசையின்பம்
நோக்கிமெலித்தல்பெற்றது. நீல் - கடைக்குறை- பி-ம்: உமிழ்ந்தோனென.    (206)

ஐந்தாம்போர்ச்சருக்கம் முற்றிற்று.

--------

ஆறாம்போர்ச்சருக்கம்.

1.-கடவுள்வாழ்த்து.

கோயிலா ளுடையபைங் கொண்டலார் கண்டுயில்
பாயலாய் வாழநீ பாக்கியஞ் செய்ததென்
தீயிலா துவமைவே றில்லெனத் தீயநின்
வாயெலா நஞ்சுகால் வாளெயிற் றுரகமே.