களத்தை அடைந்தார்கள்; (எ-று.)-கரி - மற்றை மூன்றுவகை அங்கங்களுக்கும் உபலக்ஷணம். (208) 3.-த்ருஷ்டத்யும்நன் தன்சேனையை மகரவியூகமாக வகுத்தல். பகுத்தபல்லணிகளின்பான்மையக்குரோணியான் மிகுத்தவெஞ்சேனையாம்வெள்ளநீர்வேலையைத் தொகுத்துவண்டிமிர்தொடைத்துருபதன்றிருமகன் வகுத்தனன்புறமிடாமகரமாவியூகமே. |
(இ-ள்.) வண்டு இமிர் தொடை-வண்டுகள் ஓலிக்கப்பெற்ற பூமாலையைத் தரித்த, துருபதன் திரு மகன் - துருபதராசனது சிறந்த குமாரனான திட்டத்துய்மன்,-பகுத்த - பிரிக்கப்பட்ட, பல் அணிகளின் பான்மை-பலவகை அணிகளின் தன்மையையுடைய, அக்குரோணியால்-அகௌஹிணியென்னுந் தொகையால், மிகுத்த-மிகுதியாகவுள்ள, வெம் சேனை ஆம்- பயங்கரமான(தன்பக்கத்துச் சேனையாகிய, வெள்ளம் நீர் வேலையை- நீர்வெள்ளத்தையுடைய கடலை, தொகுத்து - ஒருங்குசேர்த்து, - புறம் இடா- (பகைவர்க்குப்) புறங்கொடுக்காத, மாமகர வியூகம்-பெரிய மகர வியூகமாக, வகுத்தனன்-அணிவகுத்தான்; (எ-று.) பல் அணி - சதுரங்கசேனைகளின் வரிசைகள். மகரவியூகம் - சுறாமீன் வடிவமாகச் செய்யும் படைவகுப்பு. மகரத்தின் தலையிடத்தில் அருச்சுனனும், கண்களில் நகுல சகதேவரும், வாயில் பீமசேனனும், கண்டத்தில் அபிமந்யு கடோற்கசன் சாத்யகி தருமபுத்திரன் முதலியோரும். புறத்தில் விராடனும் திட்டத்துய்மனும், இடப்பக்கத்தில் கேகயநாட்டரசர் ஐவரும், வலப்பக்கத்தில் திருஷ்டகேதுவும் சேகிதாநனும். கால்களில் குந்திபோசனும் சதாநீகனும், வாலில்சிகண்டியும் இராவானும் நின்றனரென்று வியாசபாரதங் கூறும். (209) 4.-வீடுமன் தம்பக்கத்தவரோடு போர்க்களங்குறுகுதல் போகமுந்தருமமேயானமெய்ப்புனிதனும் நாகவெங்கொடியுடைநாயகக்குரிசிலும் வேகவெம்படையுடைவேந்தருஞ்சேனையும் ஆகவங்குறுகினாராரவம்பெருகவே. |
(இ-ள்.) தருமம்ஏ போகம்உம் ஆன-அறத்தையே இன்பமுமாகக் கொண்ட, மெய் புனிதன்உம்-சத்தியந்தவறாத பரிசுத்த குணமுடைய வீடுமனும், நாகம் வெம் கொடி உடை-பாம்பை யெழுதிய கொடிய துவசத்தையுடைய, நாயகன் குரிசில்உம் (யாவர்க்குந்) தலைமையரசனான துரியோதனனும், வேகம் வெம் படை உடை - (போரில்) விரைவையும் வெவ்விய ஆயுதங்களையு முடைய, வேந்தர்உம்- அரசர்களோடும், சேனைஉம்-சேனைகளோடும், ஆரவம்பெருக-முழக்கம் மிக, ஆகவம் குறுகினார்-, போர்க்களத்தை அடைந்தார்கள்; (எ - று,) |