16.-வீமன் துரியோதனனை அம்பெய்து வருத்துதல். வரத்தின்முன்பெறுகதைவன்மையும்வின்மையுஞ் சிரத்தினின்றெண்ணவோர்பேர்பெறுஞ்சேவகன் சரத்தினுங்கடுகுதேர்ச்சர்ப்பகேதனனையன் றுரத்தின்வெங்கணைகள்பட்டுருவவில்லுதையினான். |
(இ-ள்.) வரத்தின் - வரத்தினாலே, முன் பெறு - முன்னே பெற்ற, கதை - கதாயுதத்தினது, வன்மைஉம் - வலிமையிலும், வின்மைஉம் - வில்லின்திறத்திலும், சிரத்தின் நின்று எண்ண - (தன்னைத்) தலைமையாகவைத்து (யாவரும்) மதிக்கும்படி, ஓர் பேர் பெறும் - ஒப்பற்ற புகழைப் பெற்ற, சேகவன் - வீரனான வீமன்,-அன்று - அப்பொழுது, சரத்தின்உம் கடுகு தேர் சர்ப்பகேதனனை - (வில்லினின்று விடப்பட்ட) அம்பைக்காட்டிலும் விரைவாகவருகிற தேரையுடைய பாம்புக்கொடியனான துரியோதனனை, உரத்தின் வெம் கணைகள் பட்டு உருவ - மார்பிலே கொடிய அம்புகள் பட்டு ஊடுருவும்படி, வில் உதையினான் - வில்லினின்று (அம்புகளைச்) செலுத்தினான்; (எ-று.) காண்டவதகநகாலத்தில் அக்காட்டுத்தீயினின்று அருச்சுனனால் உயிர் பிழைப்பிக்கப்பட்ட மயனென்னும் அசுரசிற்பி, பின்பு அவ்வுதவிக்குக் கைம்மாறாக,பாண்டவர்களுக்கு இராசசூயயாகத்துக்குரிய ஒரு சிறந்த இரத்தினமண்டபத்தை அமைத்துக் கொடுத்தது மன்றி, வீமசேனனுக்கு ஒரு கதாயுதத்தையும்,அருச்சுனனுக்கு ஒரு சங்கத்தையும் கொடுத்தா னென்றவரலாறு கொண்டு, இங்கே'வரத்தின்முன்பெறு கதை' எனப்பட்டது. 17.-வீமன், துரியோதனன் தம்பியரைப் புண்படுத்திப் பலரையும் உயிர் வதைத்தல். தான்விடுங்கணைகளிற்றம்பியர்தம்மையுந் தேன்விடுந்தெரியலானெய்துபுண்செய்துபின் ஊன்விடும்படிதுளைத்துருவுபல்பகழியால் வான்விடும்பேரையும்வானிலுய்த்தனனரோ. |
(இ-ள்.) (இவ்வாறு துரியோதனனை வருத்தியபின்பு),- தேன் விடும் தெரியலான் - தேனைச்சொரிகிற பூமாலையையுடைய வீமன்,- தான் விடும் கணைகளின் - தான் செலுத்தும் அம்புகளால், தம்பியர் தம்மைஉம் எய்து புண் செய்து - (துரியோதனன்) தம்பிமார்களையுந் துளைத்துப் புண்படுத்தி,-பின் - பின்பு,ஊன் விடும்படி துளைத்து உருவு பல் பகழியால் - (பகைவருயிர்) உடம்பைநீங்கும்படி (அவ்வுடம்பைத்) துளைசெய்து ஊடுருவுந்தன்மையுள்ள பல பாணங்களால், வான் விடும் பேரைஉம் வானில் உய்த்தனன்-(அப்பொழுது) வீரசுவர்க்கத்துக்குச் செலுத்தத் தக்கவர்களையும் அவ்விடத்துக்குச் செலுத்தினான் [கொன்றான்]: (எ-று.)-அரோ - ஈற்றசை. |