விகர்ணனென்பவனும், ஆய முதிர் சினம் மூள - பழமையான முதிர்ந்த கோபம் அதிகப்பட, விரைவுடன் மீளவர - வேகத்தோடு மறுபடி(போருக்கு) வர, அபிமன்னுஉம் - அபிமநயுவும், தூய வரி சிலை வாளி கொடு - குற்றமில்லாத கட்டமைந்த வில்லையும் (பல) அம்புகளையும் உடன் கொண்டு, தன தேர் கொடு - தன்னுடைய தேர்மே லேறிக்கொண்டு, அவன் எதிர் துன்னினான்- அவ்விகர்ணனெதிரிலே சென்றுசேர்ந்தான்; (எ-று.) இவர்கள், கீழ்த் துரியோதனனோடுவந்து வீமனோடு எதிர்த்துத்தோற்றவராதலால்,'மீளவர' என்றார். விகன்னன்-விகர்ணன்; வடசொல்திரிபு; இவன் துரியோதனனது இளையதம்பியரில் ஒருவன்; இராவணன் தம்பியருள் விபீஷணன் போல, நீதிகளை நன்குஉணர்ந்து நடுவுநிலைமையோடு நியாயவழியையே பேசுகிற நற்குணமுடையவன். கீழ்ச் சூதுபோர் நடந்தகாலத்தில் துரியோதனனேவலால் துச்சாசனன் திரொளபதியை முடிபிடித் திழுத்து வந்த பொழுதும் இவன் நீதியையெடுத்துக் கூறினான்; பின்பு கிருஷ்ணன் தூதுவந்த சமயத்தில், துரியோதனனும் திருதராட்டினனும் அவனைக் கொல்லும்படி ஆலோசித்தபொழுதும், இவன் தகுதியன்றென மறுத்தான்; இந்நற்குணம்பற்றியே, மேல் யுத்தத்தில் வீமன் இவனைச் சபதப்படி விதியாற் கொல்லவேண்டிய பொழுதும் மிக இரங்குவன்: இவனது நல்லுணர்வை நன்கு மதித்து, கவி இவனை அடுத்த பாட்டில் 'ஞான விகனன்' என்பர்; இப்படிபட்ட சிறப்புடையவ னாதலால், இவனை மற்றையோரினும் பிரித்தெடுத்து இங்கே தலைமையாக்கிக் கூறினார். இவனுக்கு வீமனிடத்துக் கோபம் இயல்பாகவுள்ளதன்று, தன் தமையனான துரியோதனனுக்குச் சோற்றுக்கடன் கழிக்கும்பொருட்டாக ஆகியது என்பது தோன்ற, ' ஆயமுதிர்சினம்' எனப்பட்டது. 'மேய விழியிலையாயபதி தரு' என்ற அடைமொழி-வீரர்பலர்க்கும் விகர்ணனுக்கும் உரியது. ஏய=ஏவிய: மேய=மேவிய. மூன்றாம் அடியின் முதலில் 'மாய, எனப் பிரித்து, பகையழிய என்றும், மாயம் எனப் பிரித்து, முதிர் மாயம் சினம் - மிகுந்த பொய்க் கேபம் [செயற்கையாகக்கொண்ட கோபம்] என்றும் கூறினுமாம். பி - ம்: அவரெதிர். இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்துக் கவிகள் - பெரும்பாலும் ஒன்றுமூன்றுஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களு மாகிய கழிநெடிலடிநான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள். (225) 20.- அபிமன்யு விகன்னனுடைய தேர்முதலியவற்றை அழிக்கை. மானவபிமனுஞானவிகனனைவாளிபலபலவேவமே லானவிரதமுமாவும்வலவனுமாழிகளுமுடனற்றபின் தானவிரதமுறாமல்விசையொடுதத்தியருகுறுசித்திர சேனனெனுமிளையோனதணிபெறுதேரின்மிசைகடிதேறினான். |
(இ-ள்.) மானம் அபிமன்உம்-பெருமையையுடைய அபிமந்யுவும், ஞானம் விகனனை - நல்லறிவுடைய விகர்ணனை, பல பல வாளி |