(இ - ள்.) ஆங்கு - அப்பொழுது, அவன் - அவ்வருச்சுனன், தெளிந்து - மயக்கந்தெளிந்து, தேறி - (நல்லுணர்வு) தேர்ந்து, 'அறம் பொருள் இன்பம் முற்றி - தருமஅர்த்தகாமமென்னும் மூன்றுபுருஷார்த்தங்களையும் முடிய ஒழித்து, பாங்கினால் - (பிரபத்தியாகிய பரம) உபாயத்தால், நின்னை எய்தும் - உன்திருவடியையடைந்து உய்தலாகிய, பயன் - நல்லபிரயோசனத்தை, எனக்கு உரைத்தாய் - அடியேனுக்கு அருளிச்செய்தாய்,' என்று - என்று (கண்ணனைநோக்கி உபசாரவார்த்தை) கூறி, பூ கடி கமலம் நாறும் பொன் அடிபோற்றி - சிறந்த பரிமளமுடைய செந்தாமரைமலர் போலத்தோன்றுகின்ற அழகிய (கண்ணனது) திருவடிகளை வணங்கி, யான் செய் தீங்கு எலாம் பொறுத்தி என்று - 'நான் செய்த குற்றங்களையெல்லாம் பொறுத்தருள்வாயாக' என்று (அப ராதக்ஷாமணமுங்) கூறி, செரு செயும் ஆறு பூண்டான்-போரைச் செய்யும்படி மேற்கொண்டான்;(எ -று,) "ஆயாவென் மைத்துனனே யாழித்தேர்ப் பாகாநான், பேயானுரைத்த பெரும்பிழைகள் - மாயா, பொருபடைக்கை மாலே பொறுத்தருள்வாயென்று, திருவடிக்கே வீழ்ந்தான் தெளிந்து" என்பது பாரதவெண்பா. ஆங்கு - அவ்விடத்திலென்றுமாம்; என்றது, போர்க்களத்தில் தேர்த்தட்டை. கீதையில் "ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ [எல்லாவுபாயங்களையும் முற்றவிட்டு என்னையொருவனையே நீ அடைக்கலமாக அடைவாய்]" என்ற பகவானது பிரதானமான வாக்கியத்தின் கருத்தை அனுசரித்து 'அறம்பொருளின்பமுற்றிப் பாங்கினால் நின்னையெய்தும் பயனெனக்குரைத்தாய்' என்பதற்குப் பொருள் கூறப்பட்டது; "பரனைநினைந் திம்மூன்றும், விட்டதே பேரின்பவீடு" என ஒளவையார் கூறியதையும் அறிக. அறம்பொருளின்பம் - இம்மூன்றும்திரிவர்க்க மெனப்படும்: இவற்றுள் அறமாவது-மனு முதலிய நூல்களில் விதித்தனசெய்தலும், விலக்கியனஒழிதலுமாம்; (இன்னவை செய்யத்தக்கவை யென்றும் இன்னவை செய்யத்தகாதவை யென்றும் நூல்களால் வரை) அறுக்கப்பட்டமைபற்றி, அறமென்று பெயர். பொருளாவது-தருமவழியிற்சேர்க்கப்பட்ட பொன்மணி நெல் முதலவாகும். இன்பமாவது - ஒருகாலத்து ஒருபொருளால் ஐம்புலனும் அனுபவிக்குஞ் சிறப்புடையதான சிற்றின்பம். அறம் - இம்மைமறுமைவீடென்னும் மூன்றையும், பொருள் - இம்மை மறுமை யென்னும் இரண்டையும், இன்பம் - இம்மையொன்றையும் தருவதாதல், 'அறம்பொருளின்பம்' என்ற முறைமைக்குக் காரணம். பொன் - ஆபரணத்துக்குக் கருவியாகுபெயர் எனினுமாம். தீங்கெலாம்- "பலபேசி யதிபாதக மெனக்கருதி யான்மலைவு றேனினி" என்றவை. (8) 9.-பிறகுதேரின்மீதேறிக்கொண்டு கிருஷ்ணன் பாண்டவருடன் வீடுமனைக் குறுகி, 'நீ எதிர்ப்பின் எம்மால் வெல்ல முடியுமோ? 'எனல். பூண்டவெம்பரித்தேர்மீதப்பொய்யிலாமெய்யினானும் பாண்டவர்தாமுமாகப்பகீரதிமைந்தன்றன்பால் |
|