பக்கம் எண் :

ஆறாம் போர்ச்சருக்கம்163

சந்திரனது வரவைக் கண்டமாத்திரத்தில் கடல் பொங்குவதற்குக் காரணம்,
தன்னிடத்திலிருந்து உண்டானதுபற்றித் தனக்குப் பிள்ளைமுறையாகிய
அச்சந்திரனைக் காணுதலாலாகுங் களிப்பு என்று கூறுவது கவிமரபு: அதுபற்றி
அபிமனதுவெற்றியைக் கண்டுகளிக்கிற அவன் தாதையர்க்கு, சந்திரனது வரவைக்
கண்டு பொங்குங் கடல் உவமை.                               (230)

25.-இதுமுதல் மூன்றுகவிகள் - படுகளச்சிறப்பு.

கோடுமுதலொடுவாளிகளினிறவீழ்வபலகடகுஞ்சரங்
காடுபடுதுளவோன்முன்வரவிடுகஞ்சன்மழகளிறொக்குமால்
ஓடுகுருதியினூடுவடிவொருபாதிபுதைதருமோடைமா
நீடுமுதலையின்வாயின்வலிபடுநீலகிரியைநிகர்க்குமால்.

     (இ-ள்.) (அப்போர்க்களத்திலே),-கோடு - தந்தங்கள், முதலொடு -
அடியோடு,வாளிகளின் இற - (எதிரிகளின்) பாணங்களால் அழிய, வீழ்வ-
விழுந்துகிடப்பனவான, பல கடம் குஞ்சரம் - அநேகமதயானைகள்,-காடு படு
துளவோன் முன்-காட்டிற் பொருந்திய திருத்துழாயைத் தரித்த கண்ணபிரானுக்கு
முன்னே, வர - சொல்லும், கஞ்சன் - கம்சன், விடு - ஏவிய, மழ களிறு -
இளமையான (குவலயாபீடமென்னும்) யானையை, ஓக்கும் - ஒத்திருக்கும்; ஓடு
குருதியின் ஊடு - ஓடுகிற இரத்தவெள்ளத்தினிடையே, வடிவு ஒரு பாதி புதைதரும்
- உடம்பில் ஒருபாதி அழுந்திய, ஓடைமா - நெற்றிப்பட்டத்தையுடைய யானைகள்,-
நீடு முதலையின் வாயின் - நீண்ட முதலையினது வாயினால், வலி படு -
வலிமையொழிந்த, நீலகிரியை - நீலநிறமுள்ள மலைபோன்ற (கஜேந்திரனென்னும்)
யானையை, நிகர்க்கும்-; (எ-று.)

     முன் இரண்டடியிற் கூறிய உவமை-யானைகள் தந்தம் வேரோடு ஒழிய
இறந்து விழுந்து கிடந்ததற்கும், பின் இரண்டடியிற் கூறிய உவமை - பாதியுடம்பு
வெளித்தெரியாது மறைய ஒடுக்கியதற்கு மென்க. துளசி - முல்லை நிலத்திற்கு
உரியதாதலால், 'காடுபடுதுளவு' எனப்பட்டது; இனி, 'காடுபடுதுளவோன்' என்பதற்கு
- முல்லைநிலத்துக்குத் தெய்வமாகப் பொருந்திய கண்ணபிரானென்றும்
கொள்ளலாம். நீலகிரி - கருநிறமுடைய யானைக்கு, உவமையாகுபெயர், வீழ்வ -
பெயர். ஆல் இரண்டும்- அசை.

     வில்விழாவென்கிற வியாஜம்வைத்துக் கம்சனால் வரவழைக்கப்பட்ட ஸ்ரீ
கிருஷ்ணபலராமர்கள், கம்ஸனரண்மனையை நோக்கிச் செல்லுகையில், அவனது
அரண்மனைவாயில் வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்ட
குவலயாபீடமென்னும் மதயானை கோபித்துவர, அவ்யாதவ வீரர்
அதனையெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை
யெடுப்பதுபோல எளிதிற்பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அடித்து
உயிர்தொலைத்து உள்ளேபோயினரென்பது, இரண்டாம் அடியின் கதை.  (231)