அம்புநுனிகளாலும், பட்ட பட்ட - மிகுதியாக இறந்த, போர் வீரர்-யுத்தவீரர்கள், வானின்மேல் - ஆகாயத்திலே [வீரசுவர்க்கத்தை நோக்கி] வழி நடத்தலான்-(தன் மண்டலத்தைப்பிளந்துகொண்டு அதன்) வழியே செல்லுதலால், ஆழி ஒன்று உடை தேர் அருக்கன் - ஒற்றைச்சக்கரத்தையுடைய தேரையுடைய சூரியன், மெய் தளர்ந்து-(தன்) வடிவந்தளர்ச்சிபெற்று, வேதனை மிகுத்த பின் - துன்பத்தைமிகுதியாகப்பெற்றபின்பு, (இருதிறத்தாரையும்நோக்கி), 'சேர - ஒருசேர, நீர்உம் - நீங்களும், நும் பாடி எய்துவீர் - உங்கள் படைவீட்டை அடையுங்கள்: இ சேனை-,செருவில் நொந்தது-போரில் வருந்திற்று,' என்று-என்று (சொல்லியவன், போல), போய்-, ஆராவாரம் நீடு ஆழி எய்தினான் - பேரொலி மிகுந்த (மேல்) கடலைச் சேர்ந்தான் [அஸ்தமித்தான்]; (எ - று.) தன்மைத்தற்குறிப்பேற்றவணி. கீழ் முதற்போர்ச்சருக்கத்தில்" உம்பர், வானிலடைந்த வயவருக்கு வழியாயசுடர்மண்டலம்" என்றது காண்க. நீரும், உம்மை - 'நானும் என்னிடத்தை அடைவேன்' என்பதை உணர்த்தலால், எதிரதுதழுவியஎச்சம் பி - ம்: பேர்வீர வானின்மேல். (243) 10.-மறுநாள்சூரியோதயவருணனை. வெங்க ளந்தனிற் பகன்ம லைந்தபோர் மெய்வி டாய்கெடக் கைவிடாதுபோய்த் திங்க ளின்குலத் திருவர் தம்பெருஞ் சேனை மன்னரும் பாடி யெய்தினார் இங்க ளந்தவா றப்பு றத்துவா னெல்லை தானளந் திந்த மன்னவர் தங்கள் வெஞ்சமங் காண மாமணிச் சயில மெய்தினான் றபனன் மிளவே. |
(இ-ள்.) திங்களின் குலத்து - சந்திரகுலத்திலே (பிறந்த), இருவர்தம் - இருதிறத்தாரது, பெரும் சேனை - பெரிய சேனையில் (உள்ள), மன்னர்உம் - அரசர்களும்,-வெம் களந்தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட - கொடிய போர்க்களத்திலே பகல்முழுவதும் (தாம்) செய்த போரிலாகிய உடலில்தோன்றிய களைப்புத் தணிய, கைவிடாது போய்-தொடர்ச்சியாகச்சென்று, பாடி எய்தினார் - (தங்கள்) படைவீட்டையடைந்தார்கள்; தபனன்-சூரியன், இங்கு அளந்த ஆறு - (பூமிமத்தியிலுள்ள மகாமேருமலையின் தென்திசையாகிய) இப்பக்கத்தை(ப் பகலில் தான் செல்லுதலால்) அளந்ததுபோலவே, அ புறத்து வான் எல்லை தான் அளந்து - (அம்மலையின்) வடபுறத்திலுள்ள ஆகாயஎல்லையை (இராத்திரியில்) தான் அளவிட்டு, மீள- பின்பு, இந்த மன்னவர் தங்கள் வெம் சமம்காண - இவ்வரசர்களது கொடிய போரைப் பார்ப்பதற்கு, மா மணி சயிலம் எய்தினான் - சிறந்த இரத்தினங்களையுடைய உதயகிரியை அடைந்தான் [உதித்தான்;] (எ-று.) பயன்தற்குறிப்பேற்றவணி, நிலத்தில்நடக்கும்போரை அச்சமும் வருத்தமுமின்றிக் காண்பதற்கு உயர்ந்த இடத்திலிருத்தல் இனிதாகுதலால், 'சமங்காணச் சயிலமெய்தினான்' என்றார்; இங்கே "குன்றேறி யானைப்போர்கண்டற்றால்" எனத் திருக்குறளிற் |