பக்கம் எண் :

175

கூறியதைக் காண்க. உதயகிரியில் சிந்தூர அருவிவீழ்ந்த சிந்தூராகரத்திற்
சிறந்தமாணிக்கம் பிறத்தலால், அம்மலை 'மாமணிச்சயிலம்' எனப்பட்டது. சூரியன்
ஒவ்வொருநாளும் மேருமலையைச் சுற்றிவருகிறா னென்றும், அவன் அம்மலையின்
தென்புறத்தில் விளங்குங்காலம் நமக்குப் பகலும், வடபுறத்திலிருக்குங் காலம்
நமக்குஇரவு மாகிறதென்றும், இவ்வாறே பகலிரவுகள் வடபுறத்திலுள்ளார்க்கு
மாறுபடக்ககாணு மென்றும் நூற் கொள்கை; அதுபற்றி 'இங்களந்தவா
றப்புறத்துவானெல்லை தானளந்து' என்றார்.                       (244)

                    ஏழாம்போர்ச்சுருக்கம் முற்றிற்று.

-------------

எட்டாம்போர்ச்சருக்கம்.

1,-கடவுள்வாழ்த்து.

பூத்த நாபியந் தாமரைப் பூவில் வந்துபல் பூதமுஞ்
சேர்ந்த நான்முகப் புனிதனு முனிவர் யாவருந் தேவரும்
ஏத்த நாலுவே தங்களுந் தேட நின்றதா ளெம்பிரான்.
பார்த்தன் மாமணித் தேர்விடும் பாக னானதெப் பான்மையே.

     (இ-ள்.) நாபி - (தன்னுடைய) கொப்பூழிலே, பூத்த - உண்டான, அம்-
அழகிய, தாமரைப்பூவில்-, வந்து - பிறந்து, பல் பூதம்உம் -
பலவகைப்பிராணிவர்க்கங்களையும், சேர்த்த-படைத்த, நால்முகம் புனிதன்உம்-
நான்கு முகங்களையுடைய பரிசுத்தருண முள்ளவனான பிரமதேவனும், முனிவர்
யாவர்உம் - இருடிகளெல்லோரும், தேவர்உம் - தேவர்களெல்லோரும், ஏத்த -
துதிக்கவும், நாலு வேதங்கள்உம் தேட - நான்குவேதங்களும் (உண்மைகாண
மாட்டாமல்) ஆராய்ந்துதேடவும், நின்ற - பொருந்தின, தாள் -
திருவடிகளையுடைய, எம் பிரான் - நமக்கெல்லாம்தலைவனான திருமால்
பார்த்தன்மா மணி தேர் விடும் பாகன் ஆனது - அருச்சுனனது சிறந்த அழகிய
தேரைச்செலுத்தும்சாரதியானது, எ பான்மைஏ - எத்தன்மையோ? (எ - று.)

     பிரமன்முதலிய தேவர்களெல்லோருக்கும், முனிவர்களெல்லோருக்கும்,
வேதங்களுக்கும் பலநாளாகப் புகழ்ந்து தேடிப்பார்க்கவும் காணவெண்ணாத
கழலிணைகளையுடைய கடவுள், அந்தப் பரத்துவத்தை இருந்ததுதெரியாதபடி விட்டு
மனிதர்களிலொருவனான அருச்சுனனுக்குத் தேர்செலுத்தும் ஆளாக அமர்ந்த
சௌலப்பியம் எத்தன்மைத்து எனக் கூறி வியந்து அதில் தமக்கு உள்ள
ஈடுபாட்டை ஆசிரியர் விளக்குகிறார். வேதங்களால்இன்ன முந்தேடிக்
காணவொண்ணாமை அவ்வேதத்திலேயேகூறியுள்ளது. நாபீ, பூதம் - வடசொற்கள்,
யாவரும் - மத்திமதீபம். ஈற்று ஏகாரம் - வியப்பை விளக்கும்.