(இ-ள்.) விலோதனம்-கொடியிலே, பணி-பாம்பையுடைய, காவலன்- துரியோதனராசன், போர் வென்று போன மேன்மையால் - (ஏழாம்நாட்) போரில் (எதிரிகளைத் தாம்) சயித்துப்போன சிறப்பினால், இன்றுஉம் வேறும் என்று - இன்றைத்தினமும் (நாம்) சயிப்போ மென்று கருதி, அ களத்து' - அந்தப் போர்க்களத்திலே, எண் இல்சேனையோடு-அளவில்லாத சேனைகளுடனே, எய்தினான் - வந்து சேர்ந்தான்; (அங்கு), துன்று கங்கையின் திரு மகன்- (சேனாதிபதியாகப்) பொருந்தின கங்காநதியின் சிறந்த புத்திரனான வீடுமன், தூசியூகம்உம்- (தம்சேனையைக்கொண்டு) தூசியென்னும் வியூகத்தையும், துளபம் மால் - திருத்துழாயையுடைய கண்ணபிரான், வென்றி கூர் பெரு சகடம் ஆம் வெய்ய யூகம்உம் - (தம்சேனையைக்கொண்டு) வெற்றி மிகுதற்குக் காரணமானபெரியவண்டிவடிவமான கொடியவியூகத்தையும், செய்ய-வகுக்க -(எ- று.)-"வலம்புரிதாரினான் வீமனைவளைத்துவந் தெதிர்திளைத்தனன்" என அடுத்த கவியோடு குளகமாகத் தொடரும். செய்ய எய்தினான் என இப்பாட்டிலேயே முடித்தலுமாம். தூசிஎன்ற சொல்லுக்கு-குதிரையென்று ஒருபொருள் உள்ளதனால், 'அசுவவியூகம்' என்று ஒருவியூகம் அமைத்ததாகப் பொருள்காணலாம்: எட்டாம்வாளில்வீடுமன் கூர்மவியூகம் வகுத்ததாகவும், திருஷ்டத்யுமநன் ஸ்ருங்காடக [நாற்சந்தி] வியூகம் வகுத்ததாகவும் வியாசபாரதத்திலுள்ளது. வேறும்என்று-வெல்வொமென்று வீரவாதஞ்செய்து என்றுமாம். பி-ம்: சூசியுகமும். 4.- துரியோதனன் வீமனோடுபொரத் தம்பிமாருடன் வளைத்துவந்து நெருங்குதல். தொலைவிலங்கழற்றுணைவரேதுணைவராகவெஞ்சூறைபோற் கொலைவிலங்கையன்பிறைமுகக்கூரவாளியன்றேரினன் மலைவிலங்குதோள்வீமனைவளைத்துவந்தெதிர்திளைத்தனன் தலைவிலங்கலுக்கரசெனத்தகும்வலம்புரித்தாரினான். |
(இ-ள்.) தலை விலங்கலுக்கு-(எல்லா மலைகளிலும்) சிறந்த இமயமலைக்கும், அரசு என தகும் - அரசனென்று சொல்லத்தக்க, வலம்புரி தாரினான் - நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனன்,-கொலை வில் அம் கையன் - கொல்லுதலைச்செய்யும் வில்லையேந்திய அழகிய கையையுடையவனும், பிறை முகம் கூரவாளியன் - பிறைச்சந்திரன்போல நுனியமைந்த கூர்மையையுடைய (அர்த்த சந்திர;)பாணங்களை யுடையவனும், தேரினன் - தேரின்மேல் ஏறியவனுமாய்,-தொலைவு இல் அம் கழல் துணைவர்ஏ துணைவர் ஆக - தோல்வியில்லாத அழகிய வீரக் கழலையுடைய (தன்) தம்பிமார்களே சகாயராய்வர், வெம் சூறை போல் - கொடிய சுழல்பெருங்காற்றுப் போல, மலை விலங்கு தோள் வீமனை வளைத்து - மலையும் (எதிராகாமல்) விலகும்படியான [மிகவலிய] தோள்களையுடைய வீமசேனனைச் சூழ்ந்து, எதிர்வந்து திளைத்தனன்-எதிரில்வந்து நெருங்கினான்; (எ-று.) |