இப்பாட்டில், அடிகளைப் பொருளுக்கு ஏற்றவிடத்தில எடுத்துக்கூட்டியது- அடிமறிமாற்றுப்பொருள்கோள். இனி, இரண்டாம் அடியை வீமனுக்கு அடைமொழியாகக் கொள்ளினும் அமையும், இமயமலைக்குத் தென்புறத்ததாகிய பரதகண்டம் முழுவதையும் அரசாண்டவனென்ற கருத்தை, மலையரசனாகிய இமயத்துக்குத் தலைவனென்று விளக்கினார். இனி, (தைரியத்தில்) இமயமலை போல்பவனெனினுமாம். விலங்கலுக்கரசு மேருமலையென்பாரு முளர். விலங்கல்- ஒருபுறத்தே விலகியிருப்பதெனக் காரணக்குறி. 5.-இதுவும் அடுத்த கவியும்-துரியோதனன்தம்பிமாரில் எண்மரை வீமன் கொன்றமையைக் கூறும். தும்பிமேன்மதத்திடைவிழுந்தும்பிபோல்விறற்றோன்றலுந் தம்பிமாருமுற்றெய்தவெஞ்சாயகங்கண்மெய்தைக்கவே வெம்பிவீமனுந்தன்சரம்விண்டலத்திலிவ்வேந்தனுக் கெம்பிமாரிலின்றெண்மர்போயிடம்பிடிக்கவென்றேவினான். |
(இ-ள்.) தும்பி மேல் - யானையின்மேலுள்ள, மதத்திடை- மதசலத்திலே, விழும் - (கூட்டமாக வந்து) விழுந்து மொய்க்கிற, தும்பி போல் - வாண்டுகள் போல,விறல் தோன்றல்உம் தம்பிமார்உம் உற்று - வலிமையையுடைய துரியோதனராசனும்[அவனது] தம்பிமார்களும் (வீமனை) நெருங்கி, எய்த - பிரயோகித்த,வெம்சாயகங்கள் - கொடிய அம்புகள், மெய் தைக்க-(தன்) உடம்பிற்பட,-வீமன்உம்-வீமசேனனும், வெம்பி - கோபம்கொண்டு, எம்பிமாரில் எண்மர் இன்று விண்தலத்தில போய் இ வேந்தனுக்கு இடம் பிடிக்க என்று - 'என்தம்பியரில்எட்டுப்பேர் இன்றைக்கு வீரசுவர்க்கத்திற்சென்று (பின்பு வரும்) இத்துரியோதனனுக்காக அங்கு இடம் அமைத்து வைப்பார்களாக' எனக்கூறி, தன் சரம் ஏவினான் - தன் அம்புகளை (அவர்கள்மேல்) செலுத்தினான்; (எ-று.) தும்பி - வண்டின் சாதிபேதம், யானைமதத்தில் மொய்க்கிற வண்டுகள் - வீமன்மேல் ஒருங்கு நெருங்கிய துரியோதனாதியர்க்காயினும், அவர்களம்புகளுக்காயினும் உவமையாம். அவர்களும் அம்புகளும் அவனை மிகுதியாகவருத்தமாட்டாமையையும் அவற்றை வீமன் சிறிதும் மதியாத மேன்மையையும் இவ்வுவமை விளக்கும். துரியோதனனுக்குத் தம்பியர் வீமனுக்கும் தம்பியரே யாதலால், 'எம்பிமார்' என்றான். எண்மர்பெயர். அடுத்த கவியிற் கூறப்படும். தமக்குத்தலைவனான அரசன் ஓரிடத்திற்குச் செல்லுதற்கு முன்னமே அவனைச்சேர்ந்தவர்கள் தாம் சென்று இடமமைத்தல் இயல்பு; அத்தன்மையை இங்கே வீமன் பகைவர்க்குச் சமத்காரமாகக் கூறினான். இடமமைக்க என்னாது, இடம்பிடிக்க என்றது - அப்பொழுது போரில் அளவில்லாமல் மேல்மேல் இறக்கிற வீரர்களால் சுவர்க்கம் இடம்நெருங்கியிருக்கு மென்பது பற்றி யென்க. இங்ஙனம் கூறியதனால், துரியோதனனைத் தான் விரைவில் தவறாதுகொல்லுதல் உணர்த்தப்பட்டது. (249) |