துரியோதனனாற் கருதப்பட்ட கர்ணனும் உதவாமற்போனதைக் கூறினான். நின்றான்-இங்கு வாராதுநின்றான் என்க. இனி-வராதபின்பு என்றபடி. (258) 15. | புரிந்தறம்வளர்க்குநீதிப்பொய்யிலாமெய்யனங்கே செருந்தவிழ்துளபமாலைத்திருநெடுமாலுமங்கே அருந்திறலமரிற்பொன்றாதங்கிருந்தவரையிங்கும் இருந்தவர்காண்பதல்லால்யார்கொலோவிறக்கலாதார். |
(இ-ள்.) புரிந்து-விரும்பி, அறம்-தருமத்தை, வளர்க்கும்-விருத்திசெய்கிற, நீதி-நியாயத்தையுடைய, பொய் இலா மெய்யன் - பொய்யில்லாத மெய்ம்மையையுடைய, யுதிட்டிரன், அங்கே - அப்பக்கத்திலே (உள்ளான்); செருந்துஅவிழ்-வாசனை வீசப்பெற்ற, துளபம் மாலை-திருத்துழாய்மாலையையுடைய, திருநெடு மால்உம்- சிறந்த பெரிய கண்ணபிரானும், அங்கே - அப்பக்கத்திலே (உள்ளான்); (ஆதலால்), அரு திறல் அமரில்-அருமையான வலிமையாற் செய்யும் போரில், பொன்றாது - இறவாமல், அங்கு இருந்தவரை - அப்பக்கத்தில் இருந்தவர்களை, காண்பது அல்லால் - பார்ப்பதேயல்லாமல், இங்குஉம் இருந்தவர் - இப்பக்கத்திலுள்ளவர்களுள், இறக்கலாதார் யார்கொல்ஓ - (இன்னும்) இறக்க மாட்டாதவர் யாவர்உளர்? (எ-று.) அப்பக்கத்தில் தருமனது சத்தியபலமும் கண்ணனதுதெய்வபலமும் இருத்தலால், பலர் இறத்தலில்லை; இப்பக்கத்தில்உங்கள் தீச்செய்கைப் பயனும், விதுரன் கர்ணன் இவர்களது உதவியின்மையும் இருத்தலால், மற்றும்பலரும் இறத்தல் கூடுமென்றான். செருந்து-தேனும், இதழுமாம்; இச்சொல்லுக்குச் சந்தருப்பத்திற்குஏற்ப இப்பொருள்கள் கொள்ளப்பட்டன. 'திருந்தவிழ்' என்ற பாடம்பொருத்தம். இங்கும்-உம்-இசைநிறை. மாலும்-,உம் - இறந்ததுதழுவிய எச்சத்தோடுஉயர்வுசிறப்பு. மெய்க்கு 'பொய்யிலா' என்ற அடைமொழி கொடுத்தது, அதன்எப்பொழுதுந் தவறாத உறுதிப்பாட்டை உணர்த்தும். (259) 16. | விடுகநீகவலவேண்டாமேலுனக்குறுதிசொன்னேன் முடுகவாளமரிற்சென்றுமுனைமுனைந்தாரையின்றே யடுகமற்றென்றிலொன்றிலாங்கவர்தங்கள்கையாற் படுகவாவென்றுதேர்மேற்சென்றனன்பரிதிபோல்வான். |
(இ-ள்.) நீ-, கவல வேண்டா - கவலைப்படவேண்டாம்; விடுக- (அக்கவலையை)ஒழித்துவிடுவாயாக; மேல்-இனி நடக்க வேண்டிய காரியத்துக்கு, உனக்கு-, உறுதிசொன்னேன்-உறுதி மொழி கூறுகிறேன்: வாள் அமரில் - ஆயுதங்களைக்கொண்டு செய்யும் போரிலே, முடுக சென்று - விரைவாகப்போய், முனை முனைந்தாரை. -அப்போர்க்களத்திலே போர்செய்தவர்களை இன்றே அடுக - இப்பொழுதேகொல்வோமாக; (அல்லது), ஆங்கு - அவ்விடத்து (அப்போரில்), அவர் தங்கள்கையால் படுக - அப்பகைவர்களது கையால் இறப்போமாக; வா - (புறப்பட்டுப்போர் |