பக்கம் எண் :

199

ஒன்பதாம்போர்ச்சருக்கம்.

1.-கடவுள்வாழ்த்து.

பேராறு மூழ்கி மறைநூல் பிதற்றி மிடறும் பிளந்து பிறவித்
தூராறு மாறு நினையாம லுங்க டொழிலே புரிந்தசுமடீர்
ஓராறு பேத சமயங்க ளுக்கு முருவாகி நின்ற வொருவன்
ஈராறு நாம முரைசெய்து மண்கொ டிடுவார்கள் காணு மிமையோர்.

     (இ-ள்.) பேர் ஆறு மூழ்கி - பெரிய புண்ணியநதிகளிலே நீராடியும்,
மறைநூல்பிதற்றி மிடறுஉம் பிளந்து - வேதசாஸ்திரங்களை ஓதிக் கண்டம்
வருந்தியும், பிறவிதூர் ஆறும்ஆறு நினையாமல் - பிறப்புக்கு வேராகிய கருமம்
ஒழியும்விதத்தைஎண்ணாமல், உங்கள் தொழில்ஏ புரிந்த - உங்கள் காரியங்களையே
செய்துகொண்டிருந்த, சுமடீர் - அறிவில்லாதவர்களே! ஓர் ஆறு பேதம்
சமயங்களுக்குஉம்- ஒரு ஆறுவகைப்பட்ட மதங்களுக்கும், உரு ஆகி நின்ற -
(அததற்குஏற்றதெய்வ) வடிவமாய் நின்ற, ஒருவன்-ஓப்பற்ற திருமாலினது, ஈர்
ஆறு நாமம்-பன்னிரண்டு திருநாமங்களை, உரைசெய்து-சொல்லி, மண் கொடு
இடுவார்கள் -திருமணை யெடுத்துத் தரித்துக்கொள்பவர்கள் தாமே, இமையோர் -
முத்திபெற்றவராவர்; காணும் - (இதனை) அறியுங்கள்; (எ-று.)

     முத்திபெறுவதற்கு ஏதுவான தத்துவஞானத்தைப்பெற்று
பிரபத்திமார்க்கத்தையும் அதற்குஏற்ற அநுஷ்டாநத்தையும் பெறாமல், பாவந்தீர்ந்து
புண்ணியமுண்டாகும் வழியையே ஆராய்ந்த வண்ணம் புண்ணியதீர்த்தங்களில்
ஸ்நானஞ்செய்தல் வேதசாஸ்திரங்களைப் படித்தல் முதலிய நற்செய்கைகளைச்
செய்தல் பயனற்ற தென்பதாம், மறைநூல் - இருபெயரோட்டு: இனி வேதங்களும்
சாஸ்திரங்களு மென உம்மைத் தொகையுமாம், சாஸ்திரங்களின் சார மறியாமல்
அவற்றைக் கற்றலின் இழிவை விளக்குதற்கு 'பிதற்றிமிடறும் பிளந்து' என்றார்.
தூர்-வேர்; பிறவித்தூர்-ஆசையென்றுங்கொள்ளலாம்: என்றது, அவித்தையை;
"அவாவென்ப வெல்லாவுயிர்க்கு மெஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து"
என்ற திருக்குறளைக் காண்க. உங்கள் தொழிலே புரிந்த என்றது, உயிர்க்கு
உறுதிதேடாமல் உடம்புக்கு உறுதி தருவனவாகிய உண்பன உடுப்பன முதலிய
பொருள்களையே தேடிச் சம்பாதித்தலை.    

     பேதசமயங்கள்-ஒன்றோடொன்று மாறுபட்ட மதங்க ளென்றுமாம்.
ஓராறுபேதசமயங்கள்-வைஷ்ணவம் சைவம் சாக்தம் சௌரம் காணபதம்
கௌமாரம் என்னும் ஆறும் வைதிகமத மென்றும்; கபிலமதம் கணாதமதம்
பதஞ்சலிமதம் அக்ஷபாதமதம் வியாசமதம் ஜைமிநிமதம் என்னும் ஆறும்
வேதாந்தமதமென்றும்; பௌத்தம் ஜைநம் பைரவம் காளாமுகம் லோகாயதம்
சூநியவாதம் என்னும் ஆறும் புறச்சமயமென்றும் கூறப்படும். இவற்றிற் கெல்லாம்
ஏற்ற அந்தந்தத்தெய்வமாய்த் திருமால் வீற்றிருக்குந் தன்மை, கீழ்
முதற்போர்ச்சருக்கத்துக் கடவுள்வாழ்த்தில் "இறைஞ்சுவா