13.-துரோணனைக்கிட்டியதும், க்ருஷ்ணன் 'நீ அருளினால் தான் இப்பாண்டவர்க்கு வெற்றி' என்று அவனிடம் கூறுதல். போயவர்குருவின்பாதம்போற்றிமுன்னிற்பச்செங்கண் மாயவனவனைநோக்கிவாகையந்தாமஞ்சூட நீயிவர்க்களித்தியாகிலுண்டலானின்னைவையம் தாயவர்தமக்கும்வேறலரிதெனச்சாற்றினானே. |
(இ - ள்) அவர்-அப்பாண்டவர்கள், போய்-,குருவின் பாதம் போற்றி - (தமது) வில்லாசிரியனான துரோணனது அடிகளை வணங்கி, முன்நிற்ப - எதிரிலே நிற்க, (அப்பொழுது), செம் கண் மாயவன்-சிவந்த திருக்கண்களையும் மாயையையுமுடைய கண்ணன்,-அவனை நோக்கி - அத்துரோணனைப் பார்த்து, 'வாகை அம் தாமம் சூட - (வெற்றிக்குரிய) அழகிய வாகைப்பூமாலையைச் சூடும்படி, நீ-, இவர்க்கு அளித்தி ஆகில் - இப்பாண்டவர்க்குக் கருணைசெய்வாயானால், உண்டு அலால் - வெற்றி யுண்டேயல்லாமல். நின்னை வேறல் - உன்னைச்சயித்தல், வையம் தாயவர் தமக்குஉம் அரிது - உலகங்களை அளவிட்ட திருமாலுக்கும் அருமையானது,' என சாற்றினான் - என்று சொன்னான்; (எ - று.) துரோணன் அஸ்திரசஸ்திரங்களில் அதிசாமர்த்தியமுடையவனாய் அனைவர்க்கும் அழித்தற்கரியனாதலின், அவனைக்கொல்ல அவனையே உபாயங்கேட்குமாறு, மாயவன் அவனிடஞ்சென்று தோத்திரிக்கின்றானென்க. முன் - இடமுன். குருவென்னும் வடசொல்லுக்கு - (அஜ்ஞாநமாகிய மன) இருளை யொழிப்பவனென்று பொருள். வாகை - பூவுக்கு, முதலாகுபெயர். தாமம் - வடசொல். வையம் தாயவர்என்றபெயர், அவ்வெம்பிரானது நினைத்தவற்றை நினைத்தவாறே முடிக்கவல்ல ஸர்வசக்தியை விளக்கும். வையந்தாவிய கதை:- மகாபலியென்னும் அசுரராசன் தன் வல்லமையால் இந்திரன்முதலியயாவரையும் வென்று மூவுலகங்களையும் தன்வசப்படுத்தி அரசாண்டு செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்ததேவர் திருமாலைச் சரண மடைந்து வேண்ட, அவர் வாமனாவதாரமெடுத்துக் காசியபமுனிவருக்கு அதிதிதேவியினிடந் தோன்றின பிராமணப் பிரமசாரியாகி, வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டிய அனைத்தையுங் கொடுத்துவந்த அந்தப்பலியினிடஞ் சென்று, தவஞ்செய்வதற்குத் தன்காலடியால் மூவடி மண் வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து அவன் தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று, உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தையளாவிவளர்ந்து, ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் அளந்து மற்றோரடியால் அவனையும் பாதாளத்தில் அழுத்தி அடக்கினார் என்பது.வேறல் - தொழிற்பெயர். (13) 14.-இதுவும், மேற்கவியும் - ஒருதொடர்; துரோணன் தன்னை வெல்ல உபாயங்கூறியதைத் தெரிவிக்கும். மன்மகன்றருமன்வென்றுவையகமெய்தநிற்பான் என்மகனெனக்குமுன்னேயிறந்தனனென்றுவானில் |
|