துச்சாசனனே! இ மொழி - இந்தக் கர்ணண்வார்த்தையை, சென்று - (நீ) போய், கங்கை சுதனுக்கு உரைக்க - வீடுமனுக்குச் சொல்வாயாக,' என-என்று சொல்ல,- நஞ்சு ஆடு அராவை அனையான்உம் - விஷத்தையுடையதும் (படமெடுத்து) ஆடுந் தன்மையதுமான பாம்பை யொத்த கொடிய அத்துச்சாசனனும், அங்கு - அவ்வீடுமனுள்ளவிடத்தில், ஒர் நொடி உற்ற போழ்தின் - ஒரு நொடியளவு பொருந்தினபொழுதிலே, நடவா - சென்று சேர்ந்து,-சாபம் மன்னும் - விற்கள்பொருந்திய, அணி - அழகிய, எ யூகம் ஆன - எல்லாச்சேனைகளுமாகிய, இரதந்தனக்கு - தேருக்கு, நடு - நடுவிலே, ஓர் அச்சு ஆணி ஆன - ஒரு அச்சாணியையொத்த, அவனுக்கு - அவ்வீடுமனுக்கு, இவன் சொல் - இந்தக்கர்ணனது வார்த்தையை, அடைவே புகன்றனன்-ஓழுங்காகச் சொன்னான்; (எ-று.) -அரோ - ஈற்றசை. இது-கர்ணன் கூறியதை வீடுமனிடம் தெரிவிக்குமாறு துரியோதனன் துச்சாதனனிடஞ் சொல்ல, அவன் அங்ஙனே கூறியதைத் தெரிவிக்கும். வியூகத்தையே இரதமாக உருவகஞ்செய்து, வீடுமனை அச்சாணியாக உருவகஞ்செய்தார். அச்சு - சக்கரங்கோக்கும் மரம். ஆணி - அச்சக்கரம்கழலாமல் அச்சின்நுனியில் செருகுவது. அந்த ஆணி தான் ஒன்றாய் ஓரிடத்திலிருந்து கொண்டே மிகப் பெரிய தேர்முழுவதுக்கும் ஆதாரமாயிருத்தல் போல, வீடுமன் தான் ஒருவனாய் ஓரிடத்திலிருந்து கொண்டே வில்முதலிய ஆயுதங்களையுடைய பெரியசேனை முழுவதுக்கும் ஆதாரமாயிருந்து நடத்தும் வலிமையையுடையவனென்க. (289) 7. | பேரன்புகன்றமொழிகேள்விசெய்துபெரியோன்முகிழ்த்துநகையா வீரம்புகன்றெனினிநானுமக்குவிசயற்செறுத்தன்முடியா தீரந்துறந்தவொருநூறுபேரைமகுடத்துணிப்பலெனவே நேரன்றமர்க்கணுரைசெய்தவாய்மைநிறைவேறுநாளையுடனே. |
இதுமுதல் எட்டுக்கவிகள் - குளகம். (இ-ள்.) பேரன் புகன்றமொழி-பௌத்திரனான துச்சாசனன் சொன்னவார்த்தையை கேள்வி செய்து - கேட்டலைச்செய்து (கேட்டு), பெரியோன் - பெரியபாட்டனான வீடுமன், முகிழ்த்து நகையா-சிறிதாகக்சிரித்து [புன்சிரிப்புச் செய்து], 'இனி - இப்பொழுது, நான்-, உமக்கு - உங்களுக்கு, வீரம் புகன்று- வீரவாதமானவார்த்தையைச் சொல்லுதலால், என் - என்னபயன்? விசயன் செறுத்தல் - அருச்சுனனைக் கொல்லுதல், முடியாது - (எவர்க்கும் எப்பொழுதும்) ஆகாது; ஈரம் துறந்த - (மனத்தில்) இரக்கமில்லாத, ஒரு நூறு பேரை - (துரியோதனாதியர்) நூற்றுவரையும், இனி-, மகுடம் துணிப்பல் - தலையறுத்திடுவேன், என-என்று, நேர் - (யாவர்க்கும்) எதிரிலே, அன்று- (திரௌபதியைத் துகிலுரிந்த) அக்காலத்தில் உரை செய்த - (வீமன்)சொன்ன, வாய்மை-சபதவார்த்தையும், நாளை உடனே-இனி விரைவிலேயே, அமர்க்கண்- போரில், நிறைவேறும் - தவறாமல் நடந்துவிடும்;(எ-று.)-இப்பாட்டில், 'நகையா' என்பது, "குன்றுவிடைநல்கி" |